ஆளுநர் மூலம் திமுக தலைவரை அழைத்து சமாதானப்படுத்தும் அளவுக்கு பாஜகவினர் பயந்து விட்டதாக திமுக இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
கரூர் மாவட்டத்தில் வேலாயுதம் பாளையத்தில் திமுக இளைஞரணியினரால் குளம் தூர்வாரப்பட்டது. அந்தப் பணியைப் பார்வையிட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி கரூர் வருகை தந்தார். தூர்வாரப்பட்ட குளத்தைப் பார்வையிட்ட பிறகு உதயநிதி செய்தியாளர்களை சந்தித்தார். “இளைஞர் அணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி குளம் தூர்வாரப்பட்டுள்ளது. இதுபோன்று மக்களுக்கு பயனுள்ள பணிகளில் திமுக இளைஞர் அணியினர் தொடர்ச்சியாக ஈடுபடுவார்கள்.


இந்தி திணிப்பு விவகாரத்தில் அமித்ஷா தன் கருத்தில் இருந்து பின்வாங்கியதும், திமுக தலைவரை ஆளுநர் அழைத்து பேசியதால் திமுக போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது திமுகவுக்கு கிடைத்த பெரிய வெற்றி. இந்தப் போராட்டம் தற்காலிகமாகத்தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியை எந்த வகையில் திணித்தாலும் தலைமையின் ஆணைப்படி திமுக இளைஞர் அணி போராடும்'” எனத் தெரிவித்தார்.


முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “ஆளுநர் மூலம் திமுக தலைவரை அழைத்து சமாதானப்படுத்தும் அளவுக்கு, பாஜகவினர் பயந்து விட்டனர்.  இதுவே, பெரிய வெற்றிதான். இந்தி திணிப்பு பற்றி பேசிய உள்துறை அமைச்சர், அமித் ஷாவே அதிலிருந்து பின்வாங்கிவிட்டார். அதனால்தான் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது” என்று தெரிவித்தார்.