தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் இந்து வாக்காளர்கள் ஓட்டுகளை ஒருங்கிணைக்கும் வகையில் வேல் யாத்திரையை பாஜக நடத்தி வருகிறது. திமுகவை டார்கெட் செய்து பாஜக செயல்பட்டாலும், வேல் யாத்திரையை திமுக கண்டுகொள்ளவில்லை. அதைப் பற்றி பேசி விளம்பரம் தர வேண்டாம் என்று கட்சியினருக்கு திமுக தலைமை உத்தரவு போட்டுவிட்டது. அதேவேளையில் இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களைக் கவர வேண்டிய  தேவை திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.  அதன் ஒரு பகுதியாகவே உதயநிதி ஸ்டாலினை வைத்து 100 நாள் தேர்தல் பிரசாரத்துக்கு திமுக தலைமை முடிவு செய்தது. 
 உதயநிதி ஸ்டாலினை வைத்து தொடங்கப்படும் இந்த பிரசாரம் கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரில் இன்று தொடங்குகிறது.  கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தல், 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மிக மோசமாகத் தோல்வியடைந்த திமுக, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் எழுந்து நின்றது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 1.1 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில்தான் அதிமுகவிடம் திமுக ஆட்சியைப் பறிகொடுத்தது. இரண்டு ஆண்டுகளில் திமுக எழுந்து நிற்பதற்கு மு.க. ஸ்டாலின் 2015-ம் ஆண்டு செப்டம்பர், அக்டோரில் நடத்திய ‘நமக்கு நாமே’ பிரசாரம் பயன் அளித்தது.
அதே பாணியிலான பிரசாரத்தைத்தான் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கும் வகுத்துக்கொடுத்திருக்கிறார்கள். கொரோனா காரணமாக மு.க. ஸ்டாலின் எந்த ஊருக்கும் செல்ல முடியாமல் சென்னையிலேயே முடங்கிக்கிடக்கிறார். காணொலி காட்சி மூலமே பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். அந்தக் குறையைப் போக்கும் வகையில் இந்த பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினை வைத்து பிரசாரம் மேற்கொள்ள திமுக முடிவு செய்தது. 
‘நமக்கு நாமே 2.0’ என்றழைக்கப்படும் இந்தப் பிரசாரத்தில் இளைஞர்களையும் புதிய வாக்காளர்களையும் குறி வைக்கும் வகையில் வேலைவாயில்லா திண்டாட்டம், மத்திய, மாநில அரசு அலுவலங்களில் வட இந்தியர்களின் ஆக்கிரமிப்பு, இந்தி திணிப்பு போன்றவற்றை மையப்படுத்தி உதயநிதி பிரசாரம் செய்வார் என்கிறார்கள் திமுகவில். மேலும் அந்தந்த ஊரில் கலந்துரையாடல் கூட்டம், முக்கியஸ்தர்களுடன் சந்திப்பு எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பிரசாரத்தில் கொங்கு மண்டத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 100 நகராட்சிகள், சிறு நகரங்கள், கிராமங்கள் வழியாக இந்தப் பிரசாரத்தை மேற்கொள்ளவும் திமுகவில் திட்டமிடப்பட்டுள்ளது.