அடுத்து வரவுள்ள சட்டபேரவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்பார் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்துவருகிறார். இந்நிலையில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் பிரசாரத்தில் இறங்கியுள்ளார். விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார். 
பிரசாரத்தின்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரை வெற்றிபெற செய்தீர்கள். அதேபோல இடைத்தேர்தலிலும் திமுகவை  வெற்றிப்பெற வைக்க வேண்டும்.  எடப்பாடி எப்படி முதல்வர் ஆனார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். தவழ்ந்து சென்று சசிகலா காலில் விழுந்து முதல்வரானவர். ஆனால், திமுக தலைவர் அப்படி அல்ல. படிப்படியாகப் பல பொறுப்புகளை வகித்துதான் இன்று திமுக தலைவராக இருக்கிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்று அதிமுகவினர்தான் சொன்னார்கள். ஆனால், அந்த மர்மத்தை அவர்கள் கண்டுபிடிக்கவே இல்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அடுத்து வர இருக்கிற சட்டபேரவை பொதுதேர்தலுக்கு முன்னோட்டம்தான் தற்போதும்  நடைபெறும் இடைத்தேர்தல். அடுத்து வரவுள்ள சட்டபேரவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்பார்” என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.