கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை, உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பாக, கஜா புயல் பாதிப்பிலிருந்து இன்றளவும் மீண்டு வர முடியாத சூழலில் தவித்து வரும் மக்களை நேரில் சந்தித்து பாதிப்பு குறித்தும்,மேலும் தேவையான உதவிகள் குறித்தும் கேட்டு அறிந்தார்.

கடந்த மாதம் ஏற்பட்ட கஜா புயலால் கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டம் பெரும் சேதத்தை சந்தித்தது.இதன் விளைவாக... ௮ந்த பகுதிகளில் இருந்த பெரும்பாலான தென்னை மரங்கள் முதல் விவசாய பயிர்கள் வரை அழிந்துவிட்டது.

மின்கம்பங்கள் சாய்ந்தன... குடிக்க கூட தண்ணீர் இல்லாத பிரச்சனை முதல் மாற்று உடை இல்லாதது வரை மக்கள் தவியோ தவியென தவித்து வந்தனர்..உயிரிழப்பும் ஏற்பட்டது.. இது போன்ற மீளா துயரத்தில் இருந்த மக்களுக்கு பல்வேறு மாவட்டத்தில் இருந்து தேவையான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

அரசு உதவி செய்தாலும், ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என அரசியல் வாதிகளும் களத்தில் குதித்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் திருவாரூர் பகுதிகளைச் சேர்ந்த 6 ஆயிரம் பேருக்கு சுமார் 30 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதற்கு முன்னதாகவே திமுக சார்பில் வண்டி வண்டியாய் நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், நடிகரும் முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குனரான உதயநிதி ஸ்டாலின் , புயல் பாதித்த மாவட்டங்களை பார்வையிட்டு, மக்களுக்கு பல லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கினர்.இப்படி ஒரு ரண களத்திலும், குதூகலமா..?  என்பதற்கு ஏற்ப, பாதிப்படைந்த மக்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷின் திடீர் விசிட்.

உதயநிதி ஸ்டாலின் வருகைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு தான்... நீண்ட வரிசையில் நின்று நிவாரண பொருட்களை பெற்றுக்சென்ற மக்கள், உதயநிதியை பார்த்து மகராசா நீ நல்லா இருக்கனும் என வாழ்த்தி சென்றபடி இருந்தனர். இன்னொரு பக்கம் நடிகர் உதயநிதி வந்து இருக்காருன்னு.. செல்பி எடுப்பதும்.. ஆசையாய் பேசியபடியே.. பாதிப்புகளை பற்றி விவரித்தனர்.

உதயநிதி ஒரு பக்கம் வாரி வாரி வழங்க... அன்பில் மகேஷ் இன்னொரு பக்கம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் உடல் நிலையில் அக்கறை காண்பிக்க தொடங்கினார். அதன் விளைவாக தயார் செய்து வைத்த நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டது 

பல்வேறு இடங்களில் நிவாரண பொருட்களை வழங்கிவிட்டு, இறுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம், மதுக்கூர் ஒன்றிய பகுதிக்கு சென்று, நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.  பின்னர், வழி நெடுகிலும் மக்களின் அன்பில் நனைந்தவாறே அங்கிருந்து புறப்பட்டனர்.