இந்த ரஜினி, நான் இஸ்கூல்ல படிக்கிற காலத்துல இருந்தே இப்படித்தான் பாஸு: உதார்விட்ட உதயநிதி!

*    போதைப் பொருட்கள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணம், பயங்கரவாத செயல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் பல்வேறு கிரிமினல் குற்றங்களின் பின்னணிக்கும் காரணமாக இருக்கிறது. அதனால், போதைப் பொருள் கடத்தலை அடியோடு ஒழிக்க, மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்த இந்த போதைப்பொருள் கடத்தல் பிரச்னைக்கு எதிராக போராட வேண்டும். 
-    அமித்ஷா (இந்திய உள்துறை அமைச்சர்)

*    இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனன் நாராயணமூர்த்தியின் மருமகனுமான, ரிஷி சுனாக், பிரிட்டன் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு  பிரிட்டன் ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து பிரிட்டன் அமைச்சரவையில், பிரதமருக்கு அடுத்த மிக உயர்ந்த பதவியை வகிப்பவர் என்ற பெருமை ரிஷிக்கு கிடைத்துள்ளது. 

-    பத்திரிக்கை செய்தி

*    கடந்த 2018 அக்டோபர் 2ல் காமராஜரின் நினைவு தினத்தன்று, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தமிழக அரசுக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும் பேசியதாக நேற்று கோட்டூர்புரம் போலீஸில் புகார் தரப்பட்டது. இதையடுத்து சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 
-    பத்திரிக்கை செய்தி. 

*    பத்து நிமிடங்களில் மேடையில் இரண்டு திருமணங்கள் நடந்துள்ளன. உலகில் வேறு எங்கும் நடந்திராத சிக்கனமான திருமணம் இது. சிக்கனம் என்றால் நேரம் கூட இதில் சிக்கனம். இரண்டு சிறிய மாலைகள் மட்டும்தான் செலவு. இதுதான் சுயமரியாதை திருமணம். இந்த கொள்கைகளை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. 
-    வீரமணி (திராவிடர் கழக தலைவர்)

*    தேர்தல் வியூகம் வகுப்பாளர், பிரசாந்த் கிஷோர் திறமைசாலி. தேர்தல் நுணுக்கங்கள் தெரிந்த அரசியல் டிரைவர். தமிழகத்தில் அவர் ஓட்ட உள்ள தி.மு.க. எனும் கார், பந்தயத்துக்கு ஏற்ற கார் அல்ல. 50 ஆண்டுகள் பழமையான கார். அதற்கு நான்கு டயர்கள் கூட கிடையாது. 
-    பொன்.ராதாகிருஷ்ணன் (மாஜி மத்தியமைச்சர்)

*    டெல்லி சட்டசபை தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக, ஒரு இடத்தைக் கூட கைப்பற்ற முடியாமல் தோல்வி அடைந்துள்ளது. நாம் சரியான பாதையில் இருக்கிறோமா? என்று கேட்டால் ‘இல்லை’ என்று பதில் வருகிறது. அடி மட்டத்தில் இருந்து உயர் மட்டம் வரை பல விஷயங்களை சரி செய்ய வேண்டும். 
-    குஷ்பு (தேசிய செய்தி தொடர்பாளர்)

*    சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் இ.பி.எஸ். ‘என்னை மாதிரி எல்லோரும் பணியாற்ற வேண்டும்’ என அக்கட்சியினரை கேட்டுக் கொண்டுள்ளார். அவர் கூறியதைக் கேட்டால் சிரிப்புதான் வருகிறது. 
-    மு.க.ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)

*    அத்திக்காயை பிளந்தால் சொத்தை என்பது போல, தமிழகத்தின் ஊழல்கள் ஒவ்வொன்றும் வெளிவரத் துவங்கியுள்ளன. டி.என்.பி.எஸ்.சி. நடத்திய ‘வி.ஏ.ஓ.’ தேர்வு உட்பட பல தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளது. 
-    துரைமுருகன் (தி.மு.க. பொருளாளர்)

*    மாணவர்களின் நலன் கருதியே 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளோம். இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமல்ல. அதேவேளையில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் இனிமேல் கூடுதல் கவனம் செலுத்தப்படும். 
-    கே.ஏ.செங்கோட்டையன் (தமிழக அமைச்சர்)


*    அரசியலுக்கு யார் யாரோ வர்றாங்க, வரப்போறாங்கன்னு சொல்லுவாங்க. நான் ஸ்கூல்ல படிக்கும் காலத்துல பேசியதைத்தான் இப்பவும் பேசுறாங்க. அடுத்த வருஷம் வரப்போவதாக பேசிட்டிருக்காங்க. இதையெல்லாம் பத்தி நாம கவலைப்படவும் வேணாம், கண்டுக்கவும் வேணாம். 
-    உதயநிதி ஸ்டாலின் (தி.மு.க. இளைஞரணி செயலாளர்)
:    விஷ்ணுப்ரியா