தமிழகத்தில் உலக கோப்பை கபடி போட்டி நடைபெறுமா.? அமைச்சராக பதவி ஏற்று சட்டசபையில் உதயநிதி அளித்த முதல் பதில்
கபடி மற்றும் சிலம்பம் ஆகிய விளையாட்டுகளை உள்ளடக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட மற்றும் மாநில அளவில் ஜூன் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், திருப்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா என்றும், முதலமைச்சர் உலகக்கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் எப்போது நடத்தி முடிக்கப்படும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சராக பொறுப்பேற்றப்பின் முதல்முறையாக பேரவையில் பதிலளித்து பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருப்பூரில் 8 ஏக்கரில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும், டென்னிஸ், கைப்பந்து, 400 மீட்டர் ஓடுதளம், கூடைப்பந்து உள்ளிட்ட வசதிகள் அமைக்கும் பணி பொதுப்பணித்துறை சார்பில் கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டு 60% பணிகள் முடிவுற்றுள்ளதாக கூறிய அவர், வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முழு பணிகள் முடிக்கப்பட்டு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 1500 பார்வையாளர்கள் அமரும் வகையில் புதிய பார்வையாளர் மாடம் அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளதாக கூறினார். அதேபோல், செஸ் ஒலிம்பியாட் போட்டி உலகமே வியக்கும் வகையில் நடத்தப்பட்டதாகவும், பெண்களுக்கான டென்னிஸ் போட்டியும் சிறப்பாக நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், கபடி மற்றும் சிலம்பம் ஆகிய விளையாட்டுகளை உள்ளடக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட மற்றும் மாநில அளவில் ஜூன் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என்றும், உலகக் கோப்பை கபடி போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.