சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் வீட்டிற்கு சென்று உதயநிதி இரங்கல் தெரிவித்த நிலையில் அவர் அங்கு செல்ல இபாஸ் எப்படி கிடைத்தது என்பது விவாதப் பொருள் ஆகியுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்லவே இ பாஸ் கட்டாயம். ஆனால் உதயநிதி சென்னையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் சென்றுள்ளார். அதுவும் சென்னை ரெட் ஜோனில் உள்ளது. சென்னையில் இருந்து மிக மிக அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே மற்ற மாவட்டங்களுக்கு செல்ல இ பாஸ் வழங்கப்படுகிறது. ஒரு சில மாவட்டங்கள் எந்த காரணம் சொன்னாலும் சென்னையில் இருந்து வருபவர்களுக்கு இ பாஸ் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டன. சாதாரண பொதுமக்கள் அத்தியாவசியமான காரணங்கள் இருந்தும் இ பாஸ் கிடைக்காத நிலையில் சென்னையில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஆனால் திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி அரசியல் காரணங்களுக்காக சென்னையில் இருந்து வெளியேறி தூத்துக்குடி சென்று திரும்பியுள்ளார். நெருங்கிய உறவினர்கள் மரணம், திருமணம், மருத்துவ காரணம் என மூன்று விஷயங்களுக்கு மட்டுமே இ பாஸ் வழங்கப்படுகிறது. ஆனால் உதயநிதிக்கு எந்த அடிப்படையில் இ பாஸ் கொடுக்கப்பட்டது என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் ஜெயராஜ் – பென்னிக்ஸ் உதயநிதிக்கு நெருங்கிய உறவினர்கள் இல்லை. அப்படி இருக்கும் போது அவர்களின் இ பாஸ் கோரிக்கையை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் ஏற்றது எப்படி என்கிற சர்ச்சை உருவாகியுள்ளது.

மேலும் சென்னையில் இருந்து உதயநிதி வெளியேறும் போது மாவட்ட எல்லையில் போலீசார் ஏன் தடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பப்படுகிறது. சென்னைக்கு பிறகு செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் என இத்தனை மாவட்டங்களை உதயநிதியால் எப்படி பிரச்சனை இல்லாமல் தாண்டிச் செல்ல முடிந்தது என்றும் கேட்கப்படுகிறது. எந்த ஒரு இடத்திலும் உதயநிதியிடம் இ பாஸ் அதிகாரிகள் கேட்கவில்லையா?- அல்லது உதயநிதி இ பாஸ் வைத்திருந்தாரா? என்றும் விவாதம் எழுந்தது.

இந்த நிலையில் உதயநிதி இ பாஸ் இல்லாமல் சாத்தான்குளம் சென்று திரும்பியுள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். ஆனால் தான் முறையாக பாஸ் பெற்றே சாத்தான்குளம் சென்று வந்ததாக உதயநிதி விளக்கம் அளித்துள்ளார். தங்கள் பயணத்தின் போது பல்வேறு இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டதாகவும் அத்தனை இடங்களிலும் தாங்கள் இ பாஸ் உள்ளிட்ட ஆவணங்களை காட்டிய பிறகே அனுமதிக்கப்பட்டதாகவும் உதயநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து விசாரித்த போது, சாத்தான்குளத்தை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவர் பெயரில் இ பாஸ் எடுக்கப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்யும் நபர்களில் ஒருவராக உதயநிதி பெயர் இடம்பெற்றுள்ளது. ஆனால், இந்த இ பாஸ்க்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எப்படி ஓகே பெறப்பட்டது என்பது தான் தற்போது மில்லியன் டாலர் கேள்வி.