two leaves problem...thirunavukkarasu press meet
மேலே இருப்பவர் எல்லாம் பார்த்துக் கொள்வார் என அதிமுக அமைச்சர்கள் கூறி வந்ததை பிரதமர் மோடி நிரூபித்துவிட்டார் என்று இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கிண்டல் அடித்துள்ளார்.
அ.தி.மு.க பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை டி.டி.வி.தினகரன் அணிக்கு ஒதுக்குவதா அல்லது இபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்குவதா என்பது தொடர்பான விசாரணை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் நடந்தது. விசாரணையின் முடிவை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
அதில் கட்சியின் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அணியினருக்கு ஒதுக்கி அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் அதிக பட்சமாக எந்த அணியில் உள்ளனர் என்பதை அடிப்படையாக் கொண்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. தற்போது அதிமுக என்ற பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த இபிஎஸ் – ஓபிஎஸ் அணிகளுக்கு தடை ஏதும் இல்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை அதிமுக அணியினர் வரவேற்றாலும், எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சன்ம செய்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள இந்த அரசை ஆட்டிப்படைக்க பாஜக செய்யும் தந்திரம்தான் இந்த தீர்ப்பு என திமுக விமர்சனம் செய்துள்ளது.
இப்பிரச்சனை குறித்து பேசி வந்த அதிமுக அமைச்சர்கள் இரட்டை இலை சின்னம் தங்களுக்குத்தான் கிடைக்கும் என தெரிவித்திருந்தனர். இதற்கு ஒரு படி மேலே சென்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சிக்கு எந்த பயமும் தேவையில்லை என்றும் இரட்டை இலை சின்னமும் நமக்குத்தான் கிடைக்கும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மேலே இருப்பவர் எல்லாம் பார்த்துக் கொள்வார், நாம் பயப்படத் தேவையில்லை என கூறினார், அதாவது மத்தியில் ஆளும் மோடி எல்லாம் பார்த்துக்கொள்வார் என தெரிவித்தார்.

தறபோது அந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொன்னது போல், மேலே இருக்கும் மோடி கரெக்டா பார்த்து செய்துவிட்டார்என கிண்டல் செய்தார்.

தமிழகத்தில் எப்படியாது பாஜக காலூன்ற நினைக்கிறது, அதற்காகத்தான் தேர்தல் ஆணையம் மூலம் இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த திருநாவுக்கரசர் தற்போது நடக்கும் இந்த அரசை தங்களது கைப்பிடிக்குள் பாஜக வைத்துள்ளது எனவும் குற்றம்சாட்டினார்.
