கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சந்தர்ப்பம் பார்த்துகொண்டிருக்கும் நிலையில், அரசை கவிழாமல் பார்த்துகொள்ள இரு சுயேட்சைகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 113 உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சி அல்லது கூட்டணியை ஆட்சியைத் தக்கவைக்க முடியும். தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு 79 உறுப்பினர்களும் மஜதவுக்கு 37 உறுப்பினர்களும் உள்ளனர். பாஜகவுக்கு 105 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மேலும் குமாரசாமி அரசை பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு உறுப்பினர், இரு சுயேட்சைகள் ஆதரித்துவருகின்றனர். சபையில் 119 உறுப்பினர்களுடன் காங்கிரஸ் - மஜத அரசு ஆட்சியை நடத்திவருகிறது.


கூட்டணி ஒப்பந்தப்படி காங்கிரசுக்கு 24 அமைச்சர்களும் மஜதவுக்கு 12 அமைச்சர்களும் என முடிவானது. அதன்படி காங்கிரஸ் கட்சியின் 24 அமைச்சர்கள் இருந்துவருகிறார்கள். மஜத ஒரு அமைச்சர் பதவிக்கு யாரையும் நியமிக்கவில்லை. இந்நிலையில் ம.ஜ.த. ஒதுக்கீட்டில் அமைச்சராக இருந்த பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மகேஷ் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
இதேபோல உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியின் வள்ளி காலமானார். அதன் காரணமாக 3 அமைச்சர் பதவிகள் காலியாக இருந்துவந்தன. இதற்கிடையே அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள் பாஜகவுக்கு தாவப் போவதாக காங்கிரஸ் கட்சியில் சில எம்.எல்.ஏ.க்கள் பூச்சாண்டி காட்டிக்கொண்டு இருப்பது வாடிக்கையாகிவிட்டது. இதனால், குமாரசாமி அரசு எப்போதும் நெருக்கடியிலேயே ஆட்சியை நடத்திவருகிறது.
 இந்நிலையில் ஆட்சிக்கு பங்கம் வராத வகையில் அரசுக்கு ஆதரவு அளித்துவரும் சுயேச்சை எம்எல்ஏக்களான முல்பாகல் நாகேஷ், சங்கர் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைச்சர் பதவியை எதிர்பார்த்திருந்து காத்திருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.