தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. வேலூர் நாடாளுமன்றத் தொகுதியோடு சேர்ந்து 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 தமிழகத்தில் காலியாக 22 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருந்தன. அந்தத் தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் 13 தொகுதிகளிலும்  திமுகவும் 9 தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெற்றன. இதனால், சபையின் பலம் 234 ஆக அதிகரித்தது. சபாநாயகரை தவிர்த்து அதிமுகவுக்கு 122 எம்.எல்.ஏ.க்களும், திமுகவுக்கு 101 எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸ் 8, முஸ்லீம் லீக் 1, டிடிவி தினகரன் 1 என எண்ணிக்கை இருந்தது. திமுக கூட்டணிக்கு 110 உறுப்பினர்கள் பலம் என்றானது.

 
ஆனால், கன்னியாகுமரி தொகுதியில் நாங்குநேரி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சபையின் பலம் 233 ஆக குறைந்தது.  திமுக கூட்டணியின் பலமும் 109 ஆக குறைந்தது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ராதாமணி உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று காலமானார். இதனால், காலி தொகுதிகளின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. திமுகவின் பலம் 100 ஆகவும், கூட்டணியின் பலம் 108 தொகுதிகளாகவும் குறைந்துள்ளது.


இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த டிசம்பர் வரை காலஅவகாசம் உள்ளது. ஆனால், ஏற்கனவே தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், வேலூர் நாடாளுமன்றத் தொகுதி காலியாக இருந்துவருகிறது. வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கும்போது இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.