அந்த ஹாஷ்டேக்கில் அவருடைய அரசியல் நிலைப்பாடுகள், கடந்த காலங்களில் பேசியது என பல விஷயங்களைக் குறிப்பிட்டு தாறுமாறாக விமர்சித்து வருகிறார்கள்.

ட்விட்டரில் ஈனப்பய_திருமா என்ற ஹாஷ்டேக் டிரெண்டிங்கில் இன்னும் நீடிக்கும் நிலையில், அந்த ஹாஷ்டேக் உருவானதன் பின்னணியை அலசுவோம். 


2009 ஏப்ரல் மே மாதங்களில் இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடைபெற்றபோது, ஆட்சியில் இருந்த திமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. திமுக, மத்திய காங்கிரஸ் ஆட்சியிலும் அங்கம் வகித்ததால். போரை நிறுத்த வேண்டும் என்று திமுகவை அரசியல் ரீதியாக நெருக்கினார்கள். அதே காலகட்டத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக முடிந்துவிடுமோ என்று திமுக அஞ்சியது. அதன் ஒஅரு பகுதியாகவே அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அரை நாள் உண்ணாவிரதம் இருந்தார் என்ற குற்றச்சாட்டு இப்போதும் உண்டு. ஆனால், பல நெருக்கடிகள் இருந்தபோதும், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக - விசிக அதிக இடங்களில் வென்றது. 

இலங்கையில் இறுதி யுத்தம் முடிந்த பிறகு, இலங்கைக்கு தமிழக எம்.பி.க்கள் குழு சென்று பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளை மத்திய காங்கிரஸ் அரசு செய்து கொடுத்தது. அதன்படி டி.ஆர்.பாலு தலைமையில் கனிமொழி, திருமாவளவன் மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றது. அந்தக் குழுவில் அதிமுக எம்.பி.க்கள் யாரும் பங்கேற்கவில்லை. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு சென்ற அக்குழுவினர் பல இடங்களை பார்த்தனர். பின்னர் இறுதியாக அன்றைய இலங்கை அதிபர் ராஜபக்சேவை எம்.பிக்கள் குழு சந்தித்தது.

அப்போது தமிழக எம்.பி.க்களுக்கு ராஜபக்சே அளித்த பரிசுப் பொருட்களை தமிழக எம்.பி.க்கள் பெற்றுக்கொண்டது பெரும் சர்ச்சையானது. இதை அப்போது சபை நாகரீகம் என்று எம்.பிக்கள் சமாளித்தனர். அதேபோல ‘இறுதி யுத்தம் நடந்தபோது பிரபாகரனோடு திருமாவளவன் இங்கு இருந்திருந்தால் மேலோகம் போயிருப்பார்’ என்று ராஜபக்சே எம்.பி.க்கள் குழு முன்னிலையில் பேசியது பெரிய அளவில் பேசப்பட்டது. அப்போதே இந்த விவகாரங்கள் எல்லாம் சர்ச்சையானவைதான். இந்த விஷயத்தில் திருமாவளவன், கனிமொழி ஆகியோர்தான் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். இந்நிலையில், இதே விவகாரம்தான் தற்போது திருமாவளவனைச் சுற்றி சர்ச்சையாகி இருக்கிறது. 

திருமாவளவன் அளித்த பேட்டி இன்று இணையத்தில் வரைலாகி உள்ளது. ராஜபக்சே அடித்த கமெண்ட் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும் திருமாவளவன், “ராஜபக்சே சொன்னவுடன் அங்கிருந்த எல்லோரும் சிரித்தார்கள். ராஜபக்சே ஒரு ஃப்ரண்ட்லியா, நகைச்சுவையாகச் சொன்னார்” என்று பேசியிருப்பதுதான் தற்போது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. இலங்கை வீரர்கள் சென்னை வர எதிர்ப்பு, ரஜினி இலங்கை செல்ல எதிர்ப்பு, முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்பு என இலங்கைக்கு எதிராக தீவிரமாக களமாடியவர், களமாடுபவர் திருமாவளவன். அப்படிப்பட்ட திருமாவளவன், ப்ரெண்லியாக ராஜபக்சே பேசினார் என்பதைப் பொறுக்க முடியாதவர்கள் சமூக ஊடங்களில் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். 

குறிப்பாக நாம் தமிழர் தம்பிகள், திருமாவளவனை, #ஈனப்பய-திருமா என்ற ஹாஷ்டேக்கில் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அந்த ஹாஷ்டேக்கில் அவருடைய அரசியல் நிலைப்பாடுகள், கடந்த காலங்களில் பேசியது என பல விஷயங்களைக் குறிப்பிட்டு தாறுமாறாக விமர்சித்து வருகிறார்கள். இதற்கு விடுதலை சிறுத்தைகள் பதில் சொல்லப்போக, ட்விட்டர் கொதித்துக் கொண்டிருக்கிறது. இன்று மாலை நிலவரப்படி 21 ஆயிரம் ட்வீட்களுடன் இந்திய அளவில் முன்னணியில் இருக்கிறது.