அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அங்கு ஹெச். ராஜாவுக்கு சீட் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்நிலையில் தான் பாஜக மேலிடம் மூலம் ஹெச்.ராஜாவுக்கு செக் வைத்து வருகிறார் தேவநாதன் யாதவ். 

கடந்த சட்டமன்றத்தேர்தலில் திருவாடணை தொகுதியில் கருணாசை எதிர்த்து நின்று தோல்வி அடைந்த தேவநாதன் வின் டி.வி உரிமையாளர். யாதவர் அமைப்பை நடத்தி வந்த தேவநாதன் மெல்ல சாதிய சாயத்தை மாற்றிவிட்டு இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தார். அந்த அமைப்பின் தலைவரான தேவநாதன் யாதவ் மெல்ல பாஜக தேசிய தலைமையிடம் நட்புப் பாராட்ட ஆரம்பித்தார். 

மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் எப்படியும் சீட் வாங்கி விட வேண்டும் என துடியாய் துடித்த அவர் சிவகங்கை தொகுதியை தனக்கு ஒதுக்கியே ஆக வேண்டும் என பியுஷ் கோயல் மூலமாக காய் நகர்த்தி வந்தார். அவர் கேட்டு வந்தது ஹெச்.ராஜா களமிறங்கப்போவதாக கூறப்படும் சிவகங்கை தொகுதி. 

அங்கு யாதவ சமூகத்தினர் அதிகம் இருப்பதால் சிவகங்கையை கேட்டு வந்தார். ஆனால், பாஜக தலைமையோ எங்களிடமே ஐந்து சீட்டுகள் தான் இருக்கிறது. அதற்கே பெரும் அடிதடி நடந்து வருகிறது. உங்களுக்கு சட்டசபை தேர்தலின் போது நிச்சயம் வாய்ப்பு கொடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளதாம் பாஜக தலைமை.