போலீசாரின் தாக்குதலால் கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்ததாக கூறப்படும் சாத்தான் குளம் வியாபாரிகள் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக 20 லட்சம் ரூபாயும், அரசுப் பணியும் அறிவித்துள்ளதன் மூலமும் அங்கு நிலைமை சரியாகவில்லை.

சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த பெனிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் ரிமாண்ட் செய்யப்பட்டனர். சிறையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட சாதியினர் மற்றும் வியாபாரிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் இருவரையும் காவல் நிலையத்தில் தாக்கியதாக கூறப்படும் எஸ்ஐ மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அங்கு ஜாதி ரீதியிலான பதற்றம் நிலவுகிறது.

இதற்கிடையே நேற்று எவ்வளவோ முயன்றும் இருவரின் உடல்களை பிரேதப்பரிசோதனை செய்ய அவர்களின் குடும்பத்தினர் ஒப்புக் கொள்ளவில்லை. தனது தந்தை மற்றும் அண்ணனை அடித்துக் கொன்ற எஸ்.ஐகள் இரண்டு பேர் மற்றும் போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்தால் மட்டுமே உடல்களை பெற்றுக் கொள்ளப்போவதாக அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இதனிடையே வியாபாரிகள் ஆளுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.

நிதி உதவி அறிவித்தால் பிரச்சனை சரியாகிவிடும் என முதலமைச்சரிடம் அதிகாரிகள் யாரோ தெரிவிக்க அதனை ஏற்று நேற்று பிற்பகல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இதனை வியாபாரிகள் குடும்பத்தினர் ஏற்கவில்லை. தாங்கள் கேட்பது பணமோ, வேலையோ இல்லை. தனது தந்தை மற்றும் அண்ணனை அடித்துக் கொன்றவர்களை கைது செய்து தங்களுக்கு நீதி கொடுக்க வேண்டும் என்பது தான் என்று அவர்கள் குடும்பத்தினர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

மேலும் முதலமைச்சர் விடுத்த அறிக்கையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர்களை கைது செய்வது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. எனவே பிரேதப் பரிசோதனைக்கு ஒப்புக் கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு குடும்பத்தினர் சென்றுவிட்டனர். இதனால் வேறு வழியில்லாமல் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதியை பெற்று நேற்று இரவு வியாபாரிகளின் உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டது. தென் மாவட்டங்களில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் பணம் கொடுத்தால் வியாபாரிகளின் குடும்பத்தினர் அமைதியாகவிடுவர் என முதலமைச்சருக்கு யோசனை கொடுத்தது யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் முதலமைச்சர் விடுத்த அறிக்கையில் வியாபாரிகள் இருவர் மீது தான் தவறு இருக்கிறது என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளதும் அவர்களின் குடும்பத்தினரை கவலை அடைய வைத்துள்ளது. இதற்கிடையே வியாபாரிகள் குடும்பத்திற்கு பின்னால் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முழு ஆதரவுடன் நிற்கின்றன. எனவே இந்த விவகாரத்தில் தற்போதைக்கு இயல்புநிலை திரும்ப வாய்ப்பு இல்லை என்றும் பதற்றத்தை தணிக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்பதும் தான் அப்பகுதியில் உள்ள அதிமுகவினரே கூறி வரும் தகவல்கள்.

இந்த விஷயத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக வழி நடத்தப்பட்டுள்ளதாகவும் நிவாரண உதவி மற்றும் அரசுப் பணி போன்றவற்றை தவறான நேரத்தில் அறிவித்துவிட்டதாகவும் கூட பேச்சுகள் அடிபடுகின்றன.