தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாடகர் கானா பாலா பாடல் ஒன்றைப் பாடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 14 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் எழுப்பி வருகின்றனர். ஆனாலும், தகுந்த எச்சரிக்கையோடுதான் தூத்துக்குடி விவகாரம் கையாளப்பட்டது என்று தமிழக அரசு கூறி வருகிறது.

இந்த நிலையில், 22 ஆம் தேதி தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்காக வீர வணக்கம் செய்யும் வகையில் பாடல் ஒன்றை பாடி வெளியிட்டுள்ளார் கானா பாலா. நான் இனிமேல் சினிமாவில் பாடுவதில்லை என்று முடிவு செய்து விட்டேன் என்றும் பணத்துக்காக இனி பாடமாட்டேன் என்றும் கூறியிருந்தார். மேலும் மக்களுக்காக நன்மை தரும் விஷயங்களுக்காக மட்டுமே பாடுவேன். அதையும் இலவசமாக பாடிக்கொடுப்பேன் என்றும் கூறியிருந்தார். அந்த வகையில் கானா பாலா தொடர்ந்து மக்களுக்காக பாடி வருகிறார்.

தூத்துக்குடி துப்பாக்கிசூடு குறித்து கானா பாலா, "என்னடா... இந்த நியாயம்" எனத் தொடங்கும் பாடல் ஒன்றை பாடி அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

திட்டமிட்டு படுகொலையை நடத்தி முடிச்சுட்டான்...
அப்பாவி மக்களைத்தான் சிட்டுக் குருவி போல் சுட்டு கொன்னுட்டான்...
காடு வயல் கழனியெல்லாம் பட்டுப்போச்சுங்க...
காத்து நீரும் மாசுபட்டு கெட்டு போச்சுங்க...

பல முறை மனு கொடுத்தும் யாரும் மதிக்கல...
இது வரை யாரும் வந்து எட்டி பார்க்கல...
பேச்சுவார்த்தை நடத்துறேன்னு ஆசைக் காட்டுனான்...
இங்க ஆட்சி நடத்தும் எல்லோருக்கும் காச நீட்டுனான்...

கோர்ட்டு கொடுத்த தீர்ப்பதானே தூக்கி வீசுனான்...
காவல் துறையை ஏவி விட்டு எங்கள விரட்டுனான்...
தனிமனுஷன் ஒருத்தனுக்கு அடி பணியுது அரசு
நம்ம தமிழ்நாட்டைப் பலி கொடுக்குற ஸ்டெர்லைட்டு எதுக்கு?

என்று தூத்துக்குடி போராட்டம் பற்றியும், உயிரிழந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் கானா பாலா அந்த பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது சமுக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகிறது.