வருங்கால சந்ததியினரின் நலனை கருத்தில் கொண்டு காஷ்மீர் பிரச்சனைக்கு இந்தியா நல்ல தீர்வு காண வேண்டும் என்று துருக்கி அதிபர் எர்டோகன் வலியுறுத்தி உள்ளார்.

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக துருக்கி அதிபர் எர்டோகன் நேற்றிரவு இந்தியா வந்தார். தனி விமானம் டெல்லி விமான நிலையம் வந்த அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று ராஷ்ட்டிர பவன் செல்லும் அதிபர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேச உள்ளார். இதனைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்த பின் இரு நாட்டு வர்த்தக அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது அணுசக்தி நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா நிரந்திர உறுப்பினர் ஆவது, இரு நாடுகளுக்கு இடையே உறவை மேம்படுத்துவது, தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளிட்டவைகள் குறித்தும் அவர் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நேற்றிரவு செய்தியாளர்களிடம் எர்டோகன் பேசுகையில், வருங்கால சந்ததியினரின் நலனை கருத்தில் கொண்டு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நல்ல தீர்வினை எடுக்க வேண்டும் என்று கூறினார். அங்கு உயிர்பலிகள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய எர்டோகன், இதற்காக இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யவும் தயாராக இருப்பதாகக் கூறினார்.