அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்காக நன்கொடை என்ற பெயரில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மோசடி வசூல் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. 

குறிப்பாக உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரத்திலேயே விஷ்வ இந்து பரிஷத் பெயரில் போலியான ஒரு அலுவலகம் திறக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, ராமர் கோயில் பெயரில் மோசடி வசூல் செய்து வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அயோத்தியில் கட்டப்பட்டுவரும் ராமர் கோயிலின் பெயரில் நாட்டின் பல்வேறு இடங்களில் போலியான நிதி திரட்டும் மோசடி ஏற்கனவே கவனத்திற்கு வந்துள்ளது.

இதை தடுக்க கோயிலை அதிகாரப்பூர்வமாக கட்டும் ராம ஜென்மபூமி தீர்த்தயாத்ரா அறக்கட்டளை சார்பில் வங்கிக் கணக்கின் விவரம் வெளியிடப்பட்டது, எனினும் ராமர் கோயிலின் பெயரில் நிதி திரட்டும் மோசடி தொடர்வது நின்றபாடில்லை என்றும், அந்த வகையிலேயே உபி மாநிலம் மீரட்டில் பொதுமக்களிடம் மோசடி செய்த நரேந்திர ரானா என்பவர் சிக்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. உபியின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மீரட் மாவட்ட கிராமங்களில் ரானா நேரிலேயே சென்று இந்த வசதி நடத்தி வந்துள்ளார். 

இதற்காக அவர் எச்பி இராமர் கோயில் நிதி என்னும் பெயரில் போலியான ரசீது மடித்து வினியோகித்துள்ளார். குறைந்தபட்சமாக 100 ரூபாயில் துவங்கி அதிகபட்சமாக ரூபாய் ஆயிரம் வரை நரேந்திர ரானா வசூல் செய்து வந்துள்ளார். இதில் பொதுமக்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகவே விஎச்பியின் பெயரில் ஒரு போலியான அலுவலகத்தையும் மீரட்டில் திறந்து வைத்துள்ளார். அவர் பல லட்சம் ரூபாய் வசூல் செய்திருக்கக்கூடும் என்று மீரட் போலீசார் தெரிவித்துள்ளனர்.