தமிழ்நாடு உருப்பட வேண்டுமென்றால் ரஜினிகாந்த் முதலமைச்சர் ஆகவேண்டுமென்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த், கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். இந்நிலையில், இந்த 2 வருடங்களாக அவர்தான் அவரது கட்சியின் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என ரசிகர்கள் நினைத்திருந்தனர்.

ஆனால் அதன் பிறகு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை கூட்டி பேசிய ரஜினி, தனது கட்சி தொடங்கப்படுவதற்கான பணிகள் நடந்துவருவதாகவும், அதே சமயம், தனக்கு முதலமைச்சராகவும் ஆசை இல்லை என்றும் இதனை ரசிகர்களும் கட்சி நிர்வாகிகளும் ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால் இதுகுறித்து ரஜினி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியிருந்தார். இந்நிலையில் அது குறித்து துக்ளக் வாசகர் ஒருவர், “இது எதைக் காட்டுகிறது”என்று கேட்டதற்கு, பதில் கூறியுள்ள குருமூர்த்தி,  “தமிழ்நாடு உருப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதையே காட்டுகிறது. அதாவது ரஜினி தனது இந்த முடிவு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.  அவர் முதலமைச்சர் வேட்பாளராக தன்னையே முன்னிறுத்தினால் தமிழ்நாடு உருப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதை காட்டுகிறது” என்று பதில் அளித்துள்ளார்.