நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றி பெற வேண்டி கோயில் கோயிலாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் குடும்பத்துடன் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 

மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிமுகவுக்கு எதிராக அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் அந்தந்த தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலை சந்தித்துள்ளார். தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக டி.டி.வி. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளின் இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. 

துரோகம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பிலும், குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான் கட்சியையும், தொண்டர்களையும் தக்க வைக்க முடியும் என்ற நோக்கத்தில் டி.டி.வி.தினகரன் அனைத்து தொகுதிகளிலும் பணத்தை வாரி இறைத்தார். அதனால் தற்போது இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதால் சூறாவளி பிரசாரம் செய்தார். கடைசியாக நேற்று முன்தினம் திருப்பரங்குன்றத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தார். 

இந்நிலையில் டி.டி.வி.தினகரன் குடும்பத்துடன் கோயில் கோயிலாக சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். நேற்று காரைக்குடி கற்பக விநாயகர் கோயிலில் சாமிதரிசனம் செய்த டி.டி.வி. நேற்றிரவு சென்னை புறப்பட்டார். வழியில் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் மனைவி, மகளுடன் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்னை புறப்பட்டு சென்றார். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என வேண்டி டி.டி.வி. கோயில் கோயிலாக சென்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் மக்களவை தேர்தல் எப்படி இருந்தாலும், இடைத்தேர்தலில் அதிமுக 10-க்கும் மேற்பட்ட தொகுதியில் வென்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடியும் என்பதால் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோயில் கோயிலாக சென்று யாகம் நடத்தி வருகிறார்.