நாற்பது தொகுதி நாடாளுமன்ற தேர்தலோடு பதினெட்டு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்ததால் அதன் வீச்சு பெரிதாய் தெரியவில்லை. ஆனால், வரும் மே 19-ல் நடக்க இருக்கும் நான்கு தொகுதி இடைத்தேர்தலோ மிகப்பெரிய வைபரேஷனை தமிழக அரசியல் அரங்கில் ஏற்படுத்தியுள்ளது. 

அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. மற்றும் நாம் தமிழர் என முக்கிய கட்சிகள் நான்குமே தங்கள் வேட்பாளரை அறிவித்து களமிறங்கிவிட்டனர். முக்கிய கட்சிகள் நான்கு தொகுதிகளுக்கும் தங்களுக்கான பொறுப்பாளர்களாக வி.வி.ஐ.பி.க்களை நியமித்து, பணிகளை தாறுமாறாக உசுப்பிவிட்டுள்ளனர். நான்கு தொகுதிகளில் ஒரேயொரு தொகுதிதான்  மிக முக்கிய தொகுதியாகிறது. அது அரவக்குறிச்சி தொகுதி. காரணம், அங்கே தி.மு.க.வின் வேட்பாளராக நிற்பவர் செந்தில்பாலாஜி. அவர் இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக தேர்வானது அ.தி.மு.க.வின் மூலம். ஆனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை இழந்தது அ.ம.மு.க.வுக்கு தாவியதால். 

இந்நிலையில் இடைத்தேர்தலில் அவர் வேட்பாளராகி இருப்பது தி.மு.க.வில். ஆக இப்படி அரசியல் தளத்தில் மிகப்பெரிய கொள்கைப்பிடிப்பு உடைய சித்தாந்தவாதியாக செந்தில்பாலாஜி இருப்பதால் அவருக்கு எதிராகதான் அ.தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் படைதிரட்டி நிற்கின்றன. ஆளுங்கட்சியை பொறுத்தவரையில் தம்பிதுரை, விஜயபாஸ்கர் இருவரும் தங்களை தாறுமாறாக செ.பா. வறுத்தெடுத்திருப்பதால், தங்கள் தலையை அடமானம் வைத்தாவது செந்தில்பாலாஜியை தோற்கடித்தே தீரவேண்டும்! என கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் குதித்துவிட்டனர். இவர்களுக்கு உதவிட ஏனைய அமைச்சர்களுக்கும் அழுத்தமாக உத்தரவிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடியார். 

ஆக ஆளுங்கட்சி தன் படை பலம் மற்றும் அதிகார பலத்தை களமிறக்கி செந்திலை மிரள வைக்க, அ.ம.மு.க.வோ வழக்கம்போல் சிம்பிளாக வேறு வகையில் யோசனை செய்கிறது. அதாவது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது சமூக அக்கறை மிகு பிரசாரத்தின் மூலம் மிக அதிகமான இளைஞர்களின் வாக்குகளை கவர்ந்திருக்கிறார் சீமான். 

இந்நிலையில், சீமானின் உதவியாளர் புகழேந்தியும், அவர் கட்சியின் முன்னாள் நிர்வாகி தனசேகரும் ஆடியோவில் ஆபாசமாக மோதிக் கொண்ட வீடியோ இப்போது வைரலாகி நாம் தமிழர் கட்சியின் பெயரையே சந்திசிரிக்க வைத்துவிட்டது. ’இனம் இனம்னு சொல்லி பொணம் திங்கிறீங்களேடா’ என்று தனசேகர் பொங்குவதற்கு பெரிய ரெஸ்பான்ஸ் மக்களிடம். ‘இந்த ஆடியோ மட்டும் எலெக்‌ஷனுக்கு ரெண்டு நாள் முன்னாடி வந்திருந்தாலும் சீமான் பிரசாரத்தை அடிச்சுக் காலி பண்ணி, அவரோட வாக்கு வங்கியை சிதைச்சிருக்கலாம்.’ என்று பெரிய கட்சிகள் பொங்குகின்றன.

 

இந்நிலையில் அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்கு முன், அதாவது பிரசார வேளையில் செந்தில்பாலாஜியின் பழைய ‘கதைகளை’ வெளிப்படுத்தும் வகையில் இப்படியொரு ஆடியோவை ரெடி பண்ணும் முடிவுக்கு அ.ம.மு.க. வந்துள்ளது. நேரடியாக அவருக்கே போன் போட்டு வம்பிழுத்தாலும், சாணக்கியத்தனமான செந்தில்பாலாஜி சிக்க மாட்டார். எனவே அவருக்கு மிக நெருக்கமான, அத்தனை ரகசியங்களையும் அறிந்த மனிதரிடம் வாயைக் கிளறி, டென்ஷனாக்கி, செந்தில் பற்றிய அத்தனை உண்மைகளையும் வெளிக்கொண்டு வரும் வகையில் ஒரு ஆடியோவை ரெடி பண்ணிட உத்தரவிட்டுள்ளதாம் அ.ம.மு.க.வின் தலைமை. 

இந்த அஸைன்மெண்ட், மாஜி எம்.எல்.ஏ.வும் இப்படி எக்ஸ்க்ளுசிவ் ஆடியோ, வீடியோக்களை அவ்வப்போது ரிலீஸ் செய்து, அரசியலில் அல்லு தெறிக்க விடும் வெற்றிவேலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம். ஒருவேளை புதிதாக எந்த ஆடியோவும் தயாரிக்க முடியவில்லை என்றால், பாதுகாப்புக்காக ஏற்கனவே எடுத்து வைக்கப்பட்டிருக்கும் பழைய பகீர் வீடியோ அல்லது ஆடியோவில் ஒன்றை நிச்சயம் தட்டிவிடும் தினகரன் தரப்பு! என்கிறார்கள். ஆனால் அந்த தரப்பு இப்படி செய்யும் என்பதை எதிர்பார்த்து, எதையும் சந்தித்து வீழ்த்திட தயாராகவே இருக்கிறாராம் செந்தில்பாலாஜி.