மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்ததையடுத்து தினகரன் கூடாராம் கலகலத்து வருகிறது. இந்நிலையில், தங்க தமிழ்செல்வனை தொடர்ந்து மதுரை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன் என்பவர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தாய் கழகத்தில் இணைந்தார். 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தினகரனின் அமமுக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வியை சந்தித்தது. இதனால் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மேலும் அக்கட்சியிலிருந்து பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அக்கட்சியிலிருந்து விலகி திமுக, அதிமுகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் தினகரனின் நம்பிக்கையாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், அமமுக கட்சியைச் சேர்ந்த மதுரை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன் என்பவர் துணை முதல்வர் ஓபிஎஸ் நேரில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். இந்த இணைப்பு விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உடனிருந்தார். தொடர்ந்து அமமுக நிர்வாகிகள் வெளியேறி வருவதால் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கலக்கத்தில் இருந்து வருகிறார்.