சசிகலா தலைமையில் ஆட்சி அமைக்க அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் சொகுசு விடுதியில் சுமார் இரண்டு வாரங்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இறுதியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க அரசு அமைக்க வேண்டியதாகிவிட்டது. இதற்கு இடையில் கூவத்தூரில் இருந்த எம்.எல்.ஏக்கள் போட்ட கும்மாளம், அங்கு அவர்கள் செய்த அட்டகாசம் என அனைத்தையும் தெரிந்தவன் தான் என்று கருணாஸ் சொல்லாமல் சொல்லியிருந்தார்.


   
மேலும் கூவத்தூரில் எம்.எல்.ஏக்களுக்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகள், கொடுத்த வாக்குறுதிகள் குறித்தும் தனக்கு தெரியும் என்று கருணாஸ் கூறியிருந்தார். இதனிடையே கூவத்தூர் விவகாரம் வீடியோகாவும் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை வெளியிடப்போவதாக கருணாஸ் மிரட்டி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.


   
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸ் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவரை தங்கதமிழ்செல்வன் தலைமையில் தினகரன் ஆதரவாளர்கள் நேரில் சென்று சந்தித்தனர். சந்திப்பின் போது கூவத்தூர் விவகாரம் குறித்து பேச வேண்டாம் அது பேக் பயர் ஆகிவிடும் என்று அவர்கள் கருணாசிடம் கூறியுள்ளனர். மேலும் கூவத்தூர் விவகாரம் குறித்து நீங்கள் பேசுவதை டி.டி.வி விரும்பவில்லை. சசிகலாவும் விரும்பமாட்டார்.


   
எனவே கூவத்தூர் விவகாரம் தொடர்ந்து ஊடகங்களில் அடிபடாமல் இருக்க அதை பற்றி பேசுவதை தவிர்க்குமாறு தங்கதமிழ்செல்வன் நேரடியாகவே கருணாசிடம் பேசியதாக சொல்லப்படுகிறது. சொல்லப்போனால் இனி கூவத்தூர் குறித்து வாய் திறக்க கூடாது என்று மறைமுகமாக தங்கதமிழ்செல்வன் உள்ளிட்டோர் கருணாசை எச்சரித்ததாகவே தெரிகிறது. ஆனால் இறுதியில் வேறு விஷயங்களை பேசி கருணாசை சமாதானம் செய்துவிட்டு தங்கதமிழ்செல்வன் அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.
   
அப்போது டி.டி.வியை சந்திக்க வேண்டும் என்று கருணாஸ் தங்கதமிழ்செல்வனிடம் கூறியதாகவும் அதற்கு ஏற்பாடு செய்வதாக கூறிவிட்டு சென்றதாகவும் சொல்லப்படுகிறது.