அமமுகவிற்கு குக்கர் சின்னத்தை கொடுக்க முடியாது என்று தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் கூறியதையடுத்து தங்களுக்கு எதாவது ஒரு பொதுச் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அமமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து டிடிவி தினகரனுக்கு பொதுச்சின்னத்தை வழங்க உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்நிலையில் அமமுக வேட்பாளர்கள் எல்லோரும் ஒரே சின்னத்தில் போட்டியிடுவார்கள். ஆனாலும் இவர்கள் ஒரே கட்சியாக கருதப்பட மாட்டார்கள். மாறாக சுயேட்சையாக கருதப்படுவார்கள் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய தினகரன்,  உலக தமிழர்கள் அனைவரும் குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். நீதிமன்றம் எங்களுக்கு நீதி வழங்கி உள்ளது. குக்கர் சின்னம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் கிடைக்கவில்லை.

குக்கர் கிடைக்கவில்லை என்றாலும் தற்போது எங்களுக்கு பொது சின்னம் கிடைக்க போகிறது. இந்த பொது சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வோம்.


பொதுச் சின்னம் எந்த சின்னத்தை ஒதுக்கினாலும் அமமுக மிகப்பெரிய வெற்றி பெறும். சின்னம் என்பது எங்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை என்றும் தினகரன் கூறினார்.

ஆர்.கே நகரில் ஒரே வாரத்தில் குக்கர் சின்னத்தை பிரபலம் அடைய செய்தோம். அ.ம.மு.க.க்கு பொதுவான சின்னம் கிடைக்கும். அதையும் பிரபலம் அடைய செய்வோம் என தெரிவித்தார்..

எங்களிடம் என்ன சின்னம் வேண்டும் என்று தேத்ல் ஆணையம் கேட்டால் நாங்கள் முடிவெடுத்து  சொல்வோம். இல்லையென்றால் தேர்தல் ஆணையம் வழங்கும் சின்னத்தை பெற்றுக்கொண்டு வெற்றி பெறுவம் என்று என்று தினகரன் அதிரடியாக தெரிவித்தார்.