ஸ்டாலின் முன்னிலையில் இணைந்த உடன் முழு திமுககாரராகவே மாறி விட்டார் தங்க தமிழ்செல்வன் தடயங்களை அழிக்க மறந்து விட்டதால் அவர் அருகில் நின்று டி.டி.வி.தினகரன் சிரிப்பாய் சிரிக்கிறார். 

டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்செல்வன். ’’எம்.ஜி.ஆருக்கும் சண்டை வந்தது உண்மை. அதெல்லாம் காலம் கடந்து விட்டது. 47 ஆண்டுகள் கழித்து ஸ்டாலின் அனைவரையும் அனுசரித்து போகக் கூடிய மனப்பக்குவத்துக்கு வந்து விட்டார்.

அவரது உழைப்பை முதலில் மதிக்க வேண்டும். அதற்காகவே ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்கிறேன்’’ என அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே அவரது இன்னோவா காரில் திமுக கொடியை கட்டிக் கொண்டிருந்தார் அவரது ஆதரவாளர் ஒருவர். அடுத்து திமுக ஐடி விங் வடிவமைத்துக் கொடுத்த புகைப்படங்களை தனது ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தில் ப்ரபைல் படமாகவும், சுவரொட்டி படமாகவும் மாற்றி விட்டார் தங்க தமிழ்செல்வன். 

அதில் எவராலும் வீழ்த்த திராவிட இயக்கம் என வாசகம் இடம்பெற்றுள்ளது. பழைய பதிவுகளை அழிக்காததால் முகப்பு பக்கத்திற்கு கீழ் டி.டி.டி.தினகரனின் போஸ்டர்கள் அணிவகுத்து நிற்கின்றன. தங்க தமிழ்செல்வன் ஸ்டாலினோடு கைகுலுக்கி சிரித்துக் கொண்டு இருக்கும் ப்ரபைல் படத்திற்குக் கீழ் ’தமிழகம் மலரட்டும். தமிழர் வாழ்வு மலரட்டும்’  என்கிற வாசகத்துடன் டி.டி.வி.தினகரன் அவர்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

  

இதனை பார்க்கும் நெட்டிசன்கள் கட்சியை மாற்றினார், கொடியை மாற்றினார், கரை வேஷ்டியை மாற்றினார். ப்ரபைல் படங்களை மாற்றினார். ஆனால், சமூக வலைதளங்களில் உள்ள பழைய தயங்களை மாற்றவில்லையே... என கூறிவருகின்றனர்.