எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், டிடிவி அணி குடியரசு தலைவரை சந்திக்க உள்ளதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.

எடப்பாடி, ஓ.பி.எஸ். அணிகள் இணைப்புக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், எடப்பாடி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் தனித்தனியாக
கடிதம் கொடுத்திருந்தனர்.

இதனால், எடப்பாடி அரசுக்கு நெருக்குடி எழுந்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கூறி வருகின்றன.

ஜி.ராமகிருஷ்ணன், தொல். திருமாவளவன், முத்தரசன், ஜவாஹிருல்லா ஆகியோர் எடப்பாடி அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் இன்று வலியுறுத்தினர்.

இந்த நிலையில், சசிகலாவின் சகோதரர் திவாகரன், இன்று மன்னார்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், டிடிவி தினகரன் அணி குடியரசு தலைவரை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.

குட்கா விவகாரத்தில், சபாநாயகர் இருக்கும்போது துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது ஏன் என்றும் திவாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். உதயசந்திரன், அமுதா உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றத்துக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் திவாகரன் கூறியுள்ளார்.