புதுச்சேரியில் சின்னவீராம்பட்டினம் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 19 பேரும் சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். இன்று காலை தகுந்த பாதுகாப்புடன் வாக்கிங் சென்றனர்.

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் இணைந்ததையடுத்து, டி.டி.வி.தினகரன் தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தங்களது நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.

இதையடுத்து டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் புதுச்சேரியை அடுத்த சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள ‘வின்ட் பிளவர்’ ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு புதுச்சேரி ரிசார்ட்டிற்கு சென்ற எம்.எல்.ஏ.,க்களுக்கு பிரியாணி, மீன் வகைகள், நான், பன்னீர் மசாலா என வகை வகையான சுவையான உணவுகள் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அசைவ உணவுகளுடன், விலை உயர்ந்த மது வகைகளும் ரிசார்ட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இன்று காலை ரிசார்ட்டிற்குள் பாதுகாப்புடன் எம்.எல்.ஏ.,க்கள் வாக்கிங் சென்றுள்ளனர். அவர்களுக்கு காலை உணவாக தோசை, சப்பாத்தி, பிரெட்-ஆம்லேட், பொங்கல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த எம்எல்ஏக்களை டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது