பிள்ளை பிடிப்பவர்களைப்போல எம்.எல்.ஏக்களை பிடிக்க முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன் மற்றும் செந்தில்பாலாஜி ஆகியோரை டிடிவி தினகரன் ஏவி விட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார். 

முதல்வர் பழனிசாமியை ஆட்சி கட்டிலில் இருந்து தூக்கி எறிய துடிக்கும் தினகரன், தனக்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்கும் 18 எம்.எல்.ஏக்கள் அல்லாமல், தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பழனிசாமிக்கு ஆதரவாக ஸ்லீப்பர் செல்களாக இருப்பதாகவும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அவர்கள் வெளிவருவர் எனவும் தினகரன் தெரிவித்து வருகிறார்.

இதைதொடர்ந்து முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக இருந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, தினகரன் இல்லத்தில் அவரை சந்தித்து ஆதரவை தெரிவித்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, பிள்ளை பிடிப்பவர்களைப்போல எம்.எல்.ஏக்களை பிடிக்க முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன் மற்றும் செந்தில்பாலாஜி ஆகியோரை டிடிவி தினகரன் ஏவி விட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். 

தனது ஆதரவாளர்களை தக்கவைத்துக்கொள்ளவே முதலமைச்சர் பதவி தனக்கு வேண்டாம் என்று தினகரன் நாடகமாடுவதாகவும் அதிமுக ஆட்சியை திமுக உள்ளிட்ட மற்றவர்கள் குறை சொன்னால் பரவாயில்லை ஆனால் டிடிவிக்கு அதுக்கு தகுதியில்லை எனவும் குறிப்பிட்டார்.