மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்தான் டிடிவி தினகரன். என்னை கட்சியில் இருந்து நீக்க அவருக்கு அதிகாரம் இல்லை என்று எம்.பி. வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைப்பு நேற்று நடைபெற்றது. இந்த இணைப்பு விழா கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இணைப்புக்குப் பிறகு பேசிய வைத்தியலிங்கம் எம்.பி., கட்சியின் பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என்றும், அப்போது, சசிகலா நீக்கப்படுவார் என்றும் கூறியிருந்தார்.

அவரின் இந்த பேச்சால், டிடிவி தினகரன் தரப்பில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநர் வித்யாசாகர் ராவை, டிடிவி தினகரன் ஆதரவாகள் இன்று சந்தித்து, எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர்.

இந்த நிலையில், எம்.பி. வைத்தியலிங்கம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய எம்.பி. வைத்தியலிங்கம், என்னை கட்சியில் இருந்து நீக்க டிடிவி தினகரனுக்கு அதிகாரம் இல்லை என்றார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்தான் டிடிவி தினகரன். 99 சதவீத தொண்டர்களின் ஆதரவு எங்களுக்கே உள்ளது. டிடிவி தினகரனின் எந்த அறிவிப்பும் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்றார்.