செந்தில் பாலாஜி திமுகவில் இணைவதை தனது அறிக்கை மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். ’செந்தில் பாலாஜி தூக்க நிலைக்கு சென்றாரா? அல்லது தூக்கப்பட்ட நிலைக்கு சென்றாரா? என்பது தெரியவில்லை’ என அவர் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’மத்திய, மாநில அரசுகளை எதிர்த்துதான் இந்த விஸ்வரூப வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். அடக்கு முறையையும், அநீதியையும் கடந்து தான் இந்த அற்புதத்தை நிகழ்த்தியுள்ளோம். அச்சுறுத்தல்களையும், அராஜாகங்களையும் எதிர்கொண்டு தான் இந்த அபார வளர்ச்சியை கண்டிருக்கிறோம். திரும்பிய திசையெல்லாம் தடைகள் இருந்தபோதும் தடந்தோள்தட்டி தடம் பதித்த வெற்றியினை ஆர்.கே.நகரில் பெற்றோம். துரோக பழனிசாமி கூட்டத்திற்கு தோல்வியை தந்து எதிர்கட்சி என மார்தட்டிய திமுகவை டெபாசிட் இழக்கச் செய்து ஒரு சுயேட்சையாக வாகை சூடி நின்றோம். 

இந்த எழுச்சியை தடுக்கவும் மக்கள் பணியில் நமது எழுச்சியை தடுக்கவும், மக்கள் பணியில் நமது முன்னேற்றத்தை முடக்கவும் முயற்சிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. துரோகிகளும் நம் எதிரிகளும் முழுமூச்சாகவும், தீவிரமாகவும் அதில் ஈடுபட்டுள்ளனர். துரோகத்தை வேரருக்க தியாகத்தின் பின் அணிவகுத்து நிற்கின்ற நம்மை மீண்டும் அவர்களோடு இணைய அழைக்கும் துரோகக் கூட்டத்தின் செயலும் சாத்தான் வேதம் ஓதுவதும் ஒன்றுதான். 
 
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு அமைப்பு செயலாளர் அம்மாவட்டத்தில் எழுச்சியோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் தற்போதைய மாவட்ட செயலாளரை மாற்றி, அந்த வாய்ப்பை தனக்கு அளித்திட வேண்டுமென வைத்த கோரிக்கையை நிராகரித்த காரணத்தாலும், தனது தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் துரோகத்தின் பக்கம் சாய்துள்ளார். மேலும் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் அதிமுக  ( அம்மா) என்ற பெயரில் நாம் இயங்கியபோது அறிவிக்கப்பட்டிருந்த ஒரு ஒன்றிய கழக செயலாளர் (செந்தில் பாலாஜி) நேற்று கட்சியை விட்டு சென்றுவிட்டாராம். அதனை தற்போது ஊடகங்களில் பெரிதுபடுத்தி காட்டப்படுகிறது. 

மறைமுகமாக மதுபான கூடம் நடத்திக் கொண்டிருந்த அந்த நபர் ஏற்கெனவே இதே செயலை செய்திருந்தபோது, அப்போது அந்த மாவட்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த நமது கட்சியின் பொறுப்பாளர் அவரை மீண்டும் அழைத்துக் கொண்டு வந்து அந்த நபரை மன்னித்து வாய்ப்பளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவ்வாறு நடந்து கொண்ட அந்த நபர் தந்த பொறுப்பை மறந்து தற்போது தூக்க நிலைக்கு சென்றாரா? அல்லது தூக்கப்பட்ட நிலைக்கு சென்றாரா? என்பது தெரியவில்லை. 

ஆலவிருட்சத்தின் இலைகள் உதிர்வதால் விருட்சமே இல்லாமல் போய்விடுமா? நம் இயக்கம் என்ற கற்பக விருட்சத்தின் ஆணிவேர் அம்மா அவர்களின் கொள்கைகளும், அடிமரமும். நுனிமரமும், கிளைகளும், கனிகளும் என அத்தனையும் உண்மையானதொண்டர்களும் நீங்களும்தான். ஒரு சில நபர்களோ, ஒரு சிறு குழுவோ தங்களின் சுய நலத்துக்காக விலகிச் செல்வதால் கட்சியே முடங்கி விடும் என்று நினைப்பார்களேயானால், அது ‘பூனை கண்மூடினால் உலகம் இருண்டு விடும்’ என நினைப்பதைப் போன்றது.

தூய தொண்டர்களாகிய உங்களைக் கொண்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை யாராலும் தீண்டி பார்க்கவும் முடியாது. சீண்டிப் பார்க்கவும் முடியாது. அப்படிச் செய்தால் அது உயர் அழுத்த மின்சாரத்தை தொடுவதற்கு சமம். அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுப்போம்’ எனத் தெரிவித்துள்ளார்.