அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
அமமுக கட்சியின் அலுவலகம் சென்னை ராயப்பேட்டையில் இன்று திறக்கப்பட்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளார் டிடிவி தினகரன் அலுவலகத்தைத் திறந்துவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது அதற்கு முன்பாகவே வெளியில் வந்துவிடுவார். சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களுக்கு ஆதரவாகவே சசிகலா இருப்பார். 
அமமுகவுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. மக்கள் செல்வாக்கு உள்ள அமமுகவுக்கு பிரஷாந்த் கிஷோர் போன்றோர் எல்லாம் தேவையில்லை. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறேன். இதேபோல தென் மாவட்டங்களில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியிலும் நான் போட்டியிடுவேன். எனவே தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடுவேன்.” என்று தினகரன் தெரிவித்தார்.
பின்னர் ரஜினி அளித்த பேட்டி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த தினகரன், “பெரியார், அண்ணாவைப் போல நடிகர் ரஜினிகாந்துக்கும் ஆட்சி அதிகாரம் பற்றி கருத்து சொல்ல சுதந்திரம் உள்ளது. ரஜினியின் பேசிய கருத்துகள் எல்லாம் அவருடைய தனிப்பட்ட கருத்து” என்று தெரிவித்தார்.

டிடிவி தினகரன், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே. நகரில் 10 ஆயிரம் வாக்குகளை மட்டுமே அமமுக பெற்றது. எனவே, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் இரு தொகுதிகளில் தினகரன் போட்டியிடுவதாகக் கூறப்படுகிறது.