ttv dinakaran delhi

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் டில்லி போலீசார் முன்பு டி.டி.வி.தினகரன் இன்று ஆஜராகிறார். இதற்காக அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவரை கைது செய்ய டில்லி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா மறைவுக்குப் சசிகலா ஓபிஎஸ் இடையே எழுந்த அதிகாரப் போட்டியில் இரட்டை இலை சின்னம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெற்றுத்தர தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லியில் கைதான சுகேஷ் சந்திரசேகரன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அதிமுக அம்மா அணியின் தினகரன் மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சுகேசிடமிருந்து 1 கோடியே 30 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கடந்த 19 ம் தேதி சென்னை வந்த டெல்லி போலீசார் தினகரன் வீட்டிற்கு சென்று சம்மன் அளித்தனர். மேலும் இன்றைக்குள் டெல்லி வந்து நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.



டெல்லி போலீசார் முன்பு நேரில் ஆஜராவதற்கு 3 நாட்கள் அவகாசம் கேட்டு தினகரன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கால அவகாசம் கொடுக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து . டெல்லி போலீசார் முன் ஆஜராவதற்காக இன்று காலை 7.40 மணிக்கு டி.டி.வி. தினகரன் தனது வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். விசாரணை முடிந்து மீண்டும் சென்னை திரும்புவாரா தினகரன் அல்லது திஹார் சிறையில் அடைக்கப்படுவாரா? பாஜகவிற்கே வெளிச்சம்.