மகாபாரத போரில் கெளரவர் தரப்பும், பாண்டவர் தரப்பும்  மாறி மாறி போர் வியூகம் வகுப்பது போல், ஆர்.கே.நகரில் தினம், தினம் ஒவ்வொரு வியூகமாய் வகுத்து வருகிறார் தினகரன்.

முதல் கட்டமாக சசிகலாவின் பெயர், படம் என எந்த தடயமும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். போகும் இடமெல்லாம் அம்மாவின் ஆட்சி என்றே முழங்கி வருகிறார்.

அவரது வியூகங்களில் பல, ஜெயலலிதாவின் பார்முலாவையே தழுவி இருக்கிறது. தொகுதியில் 50 வாக்காளர்களுக்கு ஒரு தேர்தல் பொறுப்பாளர் என்பது ஜெயலலிதாவின் பார்முலாவே.

 

மேலும், மீனவர் இன மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க, மீனவ சமூகத்தை சேர்ந்த அமைச்சர் ஜெய்குமாரையும், மீனவர் சமூக தலைவர்களையும் நியமித்துள்ளார்.

தலித் மற்றும் தலித் கிறிஸ்தவ மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய அமைச்சர் பெஞ்சமினை நியமித்துள்ளார்.

நாடார்களின் வாக்குகளை பெறுவதற்கு, வைகுண்ட ராஜன் தலைமையிலான நாடார் சங்கத்தை பயன்படுத்தி வருகிறார்.

முஸ்லீம் சமூக வாக்குகளை பெறுவதற்கு, தமிழ்மகன் உசேன் தலைமையிலான குழு மும்மரமாக இயங்கி வருகிறது.

தொகுதியில் 30 சதவிகித அளவில் இருக்கும் வன்னியர்கள், அமைப்பு ரீதியாக ஒருங்கிணைக்கப்படாததால் அதற்கு மட்டும் அவருக்கு சரியான நபர்கள் கிடைக்கவில்லை.

இது ஒரு பக்கம் இருக்க, அக்கம் பக்கத்தில் பழக்கப்பட்டவர்கள் போல பேசி பெண்களை கவருவதற்காக, மகளிர் அணி ஒன்றும் முழு மூச்சாக இயங்கி வருகிறது.

மேலும் தொப்பி சின்னத்தை தொகுதி முழுக்க பிரபலப்படுத்த எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா வேடம் அணிந்த கலை குழுவினர் தொகுதியின் பல இடங்களிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

மக்களின் குறைகள் மற்றும் புகார்களை அந்தந்த இடத்திலேயே பைசல் செய்யும் வகையில் அனைத்து அமைச்சர்களும், எம்.எல்.ஏ க்களும் தொகுதியிலேயே முகாமிட்டுள்ளனர்.

அனைத்திலும் ஜெயலலிதா பாணியை பின்பற்றும் தினகரன், ஜெயலலிதா அளவுக்கு ஒட்டு வாங்குவாரா? என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது என்கின்றனர் அதிமுகவினர்.