ttv dinakaran sure about irattai ilai symbol

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் வேட்பு மனு தாக்கல் செய்வேன், போட்டியிடுவேன், வெற்றிபெறுவேன் என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்து இரு திசைகளில் பயணித்து வருகிறது.

தேர்தல் என்று வந்தாலே வழக்கமாக அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி நிலவும்.

ஆனால் இந்த ஆர்.கே.நகர் இடைதேர்தல் கொஞ்சம் வித்தியாசமானது. அதிமுகவுக்கு உள்ளேயே போட்டி நிலவி வருகிறது.

ஒ.பி.எஸ் தரப்பா? சசிகலா தரப்பா? என பெரும் போராட்டமே தமிழகத்தில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சசிகலாவை விட்டு வெளியே வந்த ஒ.பி.எஸ் சசிகலாவுக்கு மூன்று பெரும் பிரச்சனைகளை கொடுத்து வருகிறார்.

சசிகலா பொதுச்செயலாளர் நியமனம் செல்லாது என பிரச்சனையை கொடுத்தார் ஒ.பி.எஸ். அதிலிருந்து சசிகலா தரப்பால் இன்னும் மீண்டு வரமுடியவில்லை.

அடுத்ததாக இரட்டை இலை சின்னத்தை முற்றிலும் கைபற்ற தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

அதிலும் சசிகலாவுக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

இதையடுத்து தேர்தல் காத்திருக்கிறது. அதிலும் சசிகலாவுக்கு எதிராக ஈடுகொடுத்தே போட்டியிடுவார் என தெரிகிறது.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் விசாரணை முடிவில் எங்கள் தரப்புதான் வெற்றி பெறும்.

95 சதவீத உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதால் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்.

இரட்டை இலை சின்னம் நிச்சயமாக எங்களுக்குத்தான் ஒதுக்கப்படும். நாளை மறுநாள் இரட்டை இலை சின்னத்தில்தான் வேட்பு மனு தாக்கல் செய்ய போகிறேன்.

அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. ஓரிரு நாளில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

நானும் இந்த மண்ணின் மைந்தன்தான். நானென்ன ஆப்கானிஸ்தானில் இருந்தேனா?

மேலும், ஊழலின் ஒட்டுமொத்த உருவமே தி.மு.க.தான். மு.க.ஸ்டாலின் கூறுவதை பெரிதாக எடுக்கக்கூடாது.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.