தமிழகத்தில் முதலமைச்சர் ராஜினாமா செய்யும் அளவுக்கு குற்றங்கள் மலிந்து கிடப்பதாக டுவிட்டரில் கமலின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

நடிகர் கமல் ஹாசன், அண்மையில் அளித்த ஒரு பேட்டியின்போது தமிழகத்தல் அனைத்து நிலைகளிலும் ஊழல் மலிந்துள்ளது என்றும், லஞ்சம், ஊழலில் பீகாரைவிட தமிழகம் மோசமாக உள்ளது என்றும் கருத்து தெரிவித்திருந்தார். கமலின் இந்த கருத்துக்கு தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, கே.பி. அன்பழகன், உள்ளிட்டோர் நடிகர் கமலை கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.

அதே நேரத்தில், நடிகர் கமலுக்கு ஆதரவாக திமுக செய்ல தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொது செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக அரசை மறைமுகமாக விமர்சனம் செய்து வந்த நடிகர் கமல் ஹாசன், தற்போது தமிழக முதலமைச்சர் மீது நேரடியான விமர்சனத்தை வைத்துள்ளார். 

கமல், நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழகத்தில் முதலமைச்சர் ராஜினாமா செய்யும் அளவுக்கு குற்றங்கள் மலிந்து கிடப்பதாக பதிவிட்டிருந்தார்.

தமிழகத்தில் பல குற்றங்கள் நடந்தும் எந்த கட்சிகளும் முதலமைச்சரை ராஜினாமா செய்ய வலியுறுத்தாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஒரு மாநிலத்தில் ஊழல், துயர சம்பவங்கள் நிகழ்ந்தால், முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்? முதலமைச்சர் ராஜினாமா செய்வாரா? என்றும் நடிகர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.

இன்று சென்னை, எழும்பூரில், டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள், நடிகர் கமல், டுவிட்டரில் முதலமைச்சர் குறித்த பதிவு குறித்து கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், கமலின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.