தமிழகத்தை ஆளும் (!?) இரு முதல்வர்களை மட்டுமல்லாது, இந்த தேசத்தையே ஆளும் பிரதமரையும் தெறிக்கவிட்டவர் தினகரன். ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தல் முடிவென்பது அசாதாரணமான ஒரு ரிசல்ட் அல்லவா. அப்பேர்ப்பட்ட தினகரன், கட்சி தாவும் செந்தில்பாலாஜியை சரிகட்டி, சமாதானம் செய்திட துடித்த முயற்சிகளின் பரபர  ரிலே இதோ... 

செந்தில்பாலாஜி தி.மு.க.வுக்கு தாவுகிறார் என்கிற தகவலை துவக்கத்தில் மற்றவர்களைப் போல் தினகரனும் நம்பவில்லையாம். ஆனால் உறுதியான தகவல்கள் வந்த பின்பு அதிர்ந்திருக்கிறார். உடனே  மாஜி அமைச்சர் பழனியப்பனை நேரில் சென்று செ.பா.வை சந்திக்க சொல்லியிருக்கிறார். அவரும் வந்து சந்தித்தார், எவ்வளவோ பேசிப்பார்த்தார். மசியவில்லை பாலாஜி. ‘ஏன் திடீர்ன்னு தாவுறப்பா? என்னதான் பிரச்னை, அதுவும் தி.மு.க.வுக்கு போக வேண்டிய அவசியமென்ன?’ என்று பல முறை கேட்டும் பதிலில்லை. 

ஒரு கட்டத்தில் பழனியப்பன் பிரஷர் ஏறி, பெருமூச்சு விட்டபடி உட்கார, அதன் பின் பேசிய செந்தில்பாலாஜி ”இங்கேயிருந்து நமக்கு எந்த நன்மையும் நடக்கப்போறதில்லை. அந்த அணிக்கு (ஆளும் தரப்பு) இனி போக முடியாது. போனா அவரு பன்னீர் மாதிரி ஒதுக்கப்பட்டுதான் கெடக்கணும், லோக்கல்ல தம்பிதுரை, விஜயபாஸ்கருக்கு பின்னாடியெல்லாம் என்னால நிக்க முடியாது. அவங்களை எதிர்த்து நின்னு, நசுக்கணும்னு வெறியில இருக்கேன். அதுக்கும் மேலே ஆளும் தரப்பு மேலே மக்கள் கடும் அதிருப்தியில இருக்கிறாங்க. இனி அங்க போறது வரும் தேர்தல்களில் தற்கொலைக்கு சமம். ஆக வேற வழியே இல்லை. என்னோட ஆளுங்களுக்கு ஏதாச்சும் நல்லது செய்யணும்னா, தி.மு.க.தான் கரெக்ட் ரூட்.” என்றிருக்கிறார். 

இதன் பிறகும் பழனியப்பன் எவ்வளவோ போராடியும் எதுவும் பலன் தரவில்லை. அவர் அங்கே இருந்து கொண்டே தினகரனுக்கு போன் போட்டுப் பேசியிருக்கிறார். தினகரனோ, ‘போனை செந்தில்ட்ட கொடுங்க.’ என்று சொல்ல, பழனியப்பன் ஆர்வமாய் நீட்டி..’தலைவர் லைன்ல இருக்கார்.’ என்று சொல்ல, சைகையிலேயே பேச விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாராம். பழனியப்பன் பல முறை முயன்றும் எந்த பலனுமில்லை. அந்த அறையைவிட்டே ஓடிவிட்டாராம் செந்தில்பாலாஜி.  

கனத்த குரலில் பழனியப்பன் இதை தினகரனிடம் சொல்ல அவர் செம்ம அப்செட். ஆனாலும் எந்த ஈகோவும் பார்க்காமல் செந்தில்பாலாஜியின் லைனுக்கு தானே அழைத்திருக்கிறார். எடுக்கவில்லை. பல முறை அழைத்தும் எடுக்கவேயில்லை. மீண்டும் பழனியப்பனுக்கு போன் போட்ட தினகரன், ‘அய்யாவை போனை அட்டெண்ட் பண்ணி ஒரேயொரு நிமிஷம் பேசச்சொல்லுங்க. நான் ரெண்டு வார்த்தை பேசணும்!’ என்றிருக்கிறார். 

சொல்லப்போனால், தனது குரலை கேட்டால் நிச்சயம் செந்தில்பாலாஜி யோசிக்க துவங்குவார், முடிவை மறுபரிசீலனை செய்வார்! என்கிற நம்பிக்கையில்தான் அந்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். ‘எப்படியாவது செந்திலை என்கிட்ட பேச வையுங்க.’ என்று கிட்டத்தட்ட கெஞ்சும் குரலில் பழனியப்பனிடம் தினகரன் பேசினாராம். ஆனால் தன் பிடியில் படு பிடிவாதமாய் நின்றுவிட்ட செந்தில்பாலாஜி கொஞ்சம் கூட கண்டுகொள்ளவுமில்லையாம், மனமிறங்கவும் இல்லையாம். அதன் பிறகே ‘சரி போனால் போட்டும் போடா!’ எனும் மனநிலைக்கு தினகரன் வந்துவிட்டு, வழக்கம்போல் தன்னை மெதுவாக கூல் செய்ய துவங்கியிருக்கிறார். சுயநல அரசியலில் சென்டிமெண்டுகளுக்கு இடமேதுங்க தினகரன்?