வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக போட்டியிடாத நிலையில், யாருக்கு ஆதரவு என்பது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்துக்கு கலந்துகொண்ட டிடிவி தினகரன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 
 “சிலை கடத்தலில் இரு அமைச்சர்களின் தலையீடு இருப்பதாக பொன்மாணிக்கவேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர்கள் யார் என்று அவருக்கே தெரிந்திருக்கும்.  நீதிமன்றத்தில் யாரும் விளையாட்டாகப் பொய் சொல்ல முடியாது. அதற்கான அறிக்கையை தாக்கல் செய்யும்படி பொன்மாணிக்கவேலிடம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவர் அறிக்கையை தாக்கல் செய்யும்வரை பொருத்திருந்து பார்ப்போம்.
கர்நாடகாவில் ஜனநாயகப் படுகொலை நடந்திருக்கிறது. கர்நாடகா விஷயத்தில் மக்களின் கருத்து இதுதான். வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று கேட்கிறீர்கள். வேலூர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது. சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டம் கைவிடப்பட வேண்டும். ஏற்கனவே இருக்கிற சாலைகளை அகலபடுத்தினால் போதும். விவசாய நிலங்கள், காடுகள், நீர்ஆதரங்களை அழித்துதான் ஒரு சாலையை உருவாக்கி நாடு முன்னேற வேண்டும் என்ற அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.


முன்னதாக ஆலோசனை கூட்டத்தில் தினகரன் பேசும்போது, “உள்ளாட்சித் தேர்தலில் சீட்டு வாங்கி தருவதாகக் கூறி அமமுகவினரை அதிமுகவினர் இழுக்க பார்க்கிறார்கள். உள்ளாட்சி தேர்தல் நடக்குமா என்றே தெரியவில்லை. அப்படியே நடந்தாலும் அதில் அதிமுக வெற்றி பெற முடியுமா? அமமுகவிலிருந்து அதிமுகவுக்கு சென்றவர்கள் சொந்த காரணத்துக்காகத்தான் செல்கிறார்கள். தற்போது அதிமுக அமைச்சர்கள் கட்சிக்கு ஆள்பிடிக்கும் வேலையைச் செய்துவருகிறார்கள்” என்று பேசினார்.