எம்.எல்.ஏ ஜக்கையன் மனம் மாற்றத்திற்கு காரணம் தெரியவில்லை என்றும் பணம் பாதாளம் வரை பாயும் என்பதால் அது நடந்திருக்கலாம் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் இருந்து டிடிவி அணிக்கு பிரிந்து சென்ற கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன் எம்.எல்.ஏ நேற்று மீண்டும் எடப்பாடி அணிக்கே திரும்பினார். 

இதனால் அதிமுக தரப்பில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதனிடையே எடப்பாடி அணிக்கு பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்து வருவதாக அமைச்சர்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர். 

இன்று முதலமைச்சர் எடப்பாடியை சந்தித்த ஜக்கையன் முதலமைச்சராக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், அமைச்சர்கள் ஏதாவது சொல்லிக்கொண்டு இருப்பார்கள் . அவர்களுக்கு வேறு வேலையில்லை என தெரிவித்தார். 

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது பற்றி  எம்.எல்.ஏக்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்போம் எனவும், அனிதாவுக்கு அஞ்சலி செலுத்த யாரும் செல்ல முடியவில்லை எனவும் தெரிவித்தார். 

மேலும், அமைச்சர்களுக்கு மக்களுக்கும் தொண்டர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை எனவும் தெரிவித்தார். 

ஜக்கையன் மனம் மாற்றத்திற்கு காரணம் தெரியவில்லை என்றும் பணம் பாதாளம் வரை பாயும், அது நடந்திருக்கலாம் எனவும் தெரிவித்தார்.