‘மன்னார் குடி மாஃபியா!ன்னு சொல்லப்படுற அவங்களை பார்த்து எனக்கு எந்த பயமு இல்லை.’-ஏதோ அ.தி.மு.க. அமைச்சர் ஒருவரின் கெத்து டயலாக் இது என்று நினைத்து ஏமாந்து விடாதீர்கள். 

கர்நாடகாவை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா சொன்ன வார்த்தைகள் இவை. சசிகலா மற்றும் இளவரசி இருவரும் பரப்பன சிறைக்குள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று ஆதாரத்தோடு அடிச்சு தூக்கி நாட்டையே அதிர வைத்தாரே அதே அம்மணிதான். அந்த புகார் குறித்து அமைக்கப்பட்ட வினய்குமார் கமிஷனின் விசாரணை அறிக்கை வெளியே வந்திருக்கும் நிலையில், ’சசிகலாவுக்கு பிரத்யேக சலுகைகள் வழங்குவதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தவர்களையும், அதை வாங்கிய சிறைத்துறையினரையும் விசாரித்து தண்டிக்க வேண்டும்.’ என்று லேட்டஸ்டாக அடுத்த பட்டாசை கொளுத்தியுள்ளார் ரூபா. 

இதுதான் தினகரனுக்கு எதிராக மத்திய அரசு ஒரு புது அம்பை சீவுவதற்கு கத்தி எடுத்துக் கொடுத்திருக்கிறது என்கிறார்கள். அதாவது ரூபா தன் லேட்டஸ்ட் பேட்டியில்...”சசிகலாவுக்கு சலுகை வழங்குவதற்காக சிறை நிர்வாக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தவர்களை கண்டுபிடிக்க வேண்டும். தீர விசாரித்தால்தான் இந்த உண்மைகள் வெளியே வரும். தமிழகத்தை சேர்ந்த சில அரசியல்வாதிகள், கர்நாடக தொழில் அதிபர்கள், சில இடைத்தகர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தினகரன் லஞ்சம் கொடுத்ததாக போடப்பட்ட வழக்கில் சிக்கியுள்ள நபருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கிறது. அதையெல்லாம் தீர விசாரிக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார் ரூபா. 

இந்த வரிகளைத்தான் அடிக்கோடிட்டு எடுத்துக் கொண்டுள்ளது மத்திய உளவுத்துறை. கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி உள்ளிட்டோருக்கு முறைகேடாக சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது விசாரணை கமிஷன் அறிக்கையில் உறுதியாக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு லஞ்சம் கொடுத்தது யார் யார்? என்று புதிய விசாரணையை துவக்கியிருக்கிறது மாநில லஞ்ச ஒழிப்பு பிரிவு. அதில் அ.ம.மு.க.வின் கர்நாடக மாநில செயலாளரான புகழேந்தியை நேற்று விசாரித்திருக்கிறார்கள். 

இந்த இட்த்தில்தான் பதறுகிறது தினகரன் தரப்பு! காரணம்...புகழேந்தியை அழைத்த அதே ரூட்டில் அடுத்து தினகரனையும் விசாரணைக்கு இழுப்பார்கள், அவர்தான் சசி மற்றும் இளவரசியின் சலுகைகளுக்காக லஞ்ச பணத்தை கொடுத்தனுப்பினார்! எனும் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருக்கிறது என்று சொல்லி கைதே செய்து அதே பரப்பன சிறையிலும் அடைக்க தயங்க மாட்டார்கள்! என்று படபடக்கிறார்கள். 

நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் தன்னை மடக்க இப்படியொரு ஆயுதத்தை தமிழக ஆளும் தரப்பின் தூண்டுதல் மற்றும் சப்போர்ட்டின் பேரில் டெல்லி லாபி நிச்சயம் எடுத்திட வாய்ப்பு உள்ளது! என்று அதிர்ந்து யோசிக்கிறாராம் தினகரன். தேர்தல் அறிவிப்பு நடக்கும் காலத்தை ஒட்டி தன்னை கைது செய்து, சில வாரங்கள் உள்ளே வைத்து, ஜாமீனை இழுத்தடித்து, அலைக்கழித்தால் தேர்தலில் தான் செயல்படவே முடியாத நிலை உருவாகிவிடுமே! என்றும் தினகரன் பயப்படுகிறாராம். இதற்காக இப்போதே தன் சீனியர் வழக்கறிஞர்களை ஆலோசிக்கவும், அப்படி நடந்தால் எப்படி எதிர்கொண்டு கைதிலிருந்து தப்பிப்பது? என்று வழிகளை தயார் செய்யும் படியும் உத்தரவிட்டுள்ளாராம்.