அதிமுகவில் இருந்து முக்கிய தலைவர்களை அடுத்தடுத்து கட்டம் கட்டி வரும் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், இன்று தூத்துக்குடி மாவட்ட ஜெ.ஜெயலலிதா பேரவைச் செயலாளர் அமைச்சர் கடம்பூர் ராஜு அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பொறுப்பில் உள்ள சி.த.செல்லப் பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் உள்ள அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் நிர்வாக வசதிக்காக தூத்துக்குடி வடக்கு மாவட்டம், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் என பிரிக்கப்படுகிறது என்றும்,. தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. ஆர்.சுந்தரராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக இரா.ஹென்றி தாமஸ் ஆகியோர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. இன்று முதல் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்றும், புதிய மாவட்ட செயலாளராக திருவேற்காடு பா.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார்.

கழக விவசாய பிரிவு துணை செயலாளர் பொறுப்பில் சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. எம்.வி. கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.