அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி பிரமுகர் ஒருவர், டாஸ்மாக் கடையில் ஓசி பீர் கேட்டு, டாஸ்மாக் மேற்பார்வையாளரை, இரும்பு கம்பியால் அடித்து நொறுக்கிய சம்பவம் பாபநாசம் பகுதியில் நடந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகில் உள்ள தொண்டராபட்டு அரசு டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். ஆனால், தங்களது அரசியல் செல்வாக்கால், மதுக்கடையை அங்கேயே செயல்பட வைத்த டிடிவி தினகரனின் கட்சியான அமமுகவின் ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் ஆசைத்தம்பி, டாஸ்மாக் கடையின் பணியாளர்களை மிரட்டி, தினமும் இலவசமாக குடித்து கொண்டாடி வந்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், மாத மாதம் 10 ஆயிரம் ரூபாய் மாமுல் தர வேண்டும் என்றம், டாஸ்மாக் மேற்பார்வையாளருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்கு சென்ற அமமுக பிரமுகர்  ஆசைத்தம்பியிடம், டாஸ்மாக் கடை ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர், இனி மது ஓசியாக கிடைக்காது என்று கூறியுள்ளனர். மேலும், தொடர்ந்து தொந்தரவு அளித்தால் போலீசில் புகார் கொடுப்பேன் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஓசி மது கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த ஆசைத்தம்பி, நேற்று தனது அடியாட்களுடன் சென்று டாஸ்மாக்கிற்கு சென்று, மேற்பார்வையாளரை இரும்பு ராடு கொண்டு கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், டாஸ்மாக் கடையையும் அடித்து நொறுக்கியுள்ளார்.

கடுமையாக தாக்கப்பட்ட லட்சுமணனை, அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இது குறித்து போலீசாரிடம் புகாரும் செய்யப்பட்டது., இந்த புகாரைத் தொடர்ந்து அமமுக ஒன்றிய செயலாளர் ஆசைதம்பி கைது செய்யப்பட்டு, போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.