தமிழகத்தில் தற்போது நிலவும் பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் , பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்துப் பேசுகிறார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சசிகலா பெங்களுரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சசிகலாவால் முதலமைச்சராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார்.

மேலும், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் போயஸ் தோட்ட இல்லத்தில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் வாழ்ந்து வந்தவர் சசிகலா.

எனவே போயஸ் தோட்டம் நினைவிடமாக்கப்படும் என்ற அறிவிப்பால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவர் கூட இருந்து கவனித்துக் கொண்டவரும் சசிகலாதான்.

எனவே விசாரணை கமிஷன் வைக்கப்பட்டால் சசிகலாவிடமும் விசாரிக்க வேண்டிய நிலை உருவாகும்.

எனவே இந்த இரண்டு பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்கவும், கட்சியின் அடுத்த கட்ட நடிவடிக்கை குறித்து ஆலோசிக்கவும் டி.டி.வி.தினகரன் இன்று சசிகலாவை சந்திக்கிறார்.

மேலும் இன்று சசிகலாவின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு வாழ்த்து சொல்லவும் தினகரன், சசிகலாவை சந்திக்கிறார்.