எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் !! இன்று ஆளுநரை சந்தித்து வலியுறுத்துகிறார் டி.டி.வி.தினகரன் !!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக் கோரி, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது தொடர்பாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று  சந்தித்துப் பேசுகிறார்.

ஆளுநர் மாளிகையில் நண்பகல் 12 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. இந்தச் சந்திப்பின்போது, டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ-க்கள் 19 பேரும் உடனிருப்பார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்துள்ளனர்.

இந்தக் கடிதத்தின் மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், ஆளுநரை டிடிவி தினகரன் சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து டிடிவி தினகரன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமான வாய்ப்புகள் தொடர்பாகவும் அவர் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.