கட்சியில் இல்லாத நபர் டிடிவி தினகரன் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, பரவி வரும் டெங்கு காய்ச்சல், நீட் தேர்வு போன்றவற்றைக் கண்டித்து சென்னையில் வரும் 10 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்ற அறிவிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதுடன், டெங்கு  காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. இதே போல நீட் விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்படவில்லை என ஓபிஎஸ் அணியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தமிழக அரசு என்றாலே ஊழல் அரசு என்று மக்கள் கருதுவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், தமிழக அரசை எதிர்த்து முதல் முறையாக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று ஓ.பி.எஸ். அணியினர் கூறியிருந்தனர். 

இந்த நிலையில், இன்று ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த கே.பி. முனுசாமி, சென்னை, காவல்துறை இயக்குநரிடம் 10 ஆம் தேதி போராட்டத்துக்கு அனுமதி கேட்டு மனு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கே.பி. முனுசாமி, 10 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரினோம் என்றார். போராட்டம் நடத்த சென்னை, சேப்பாக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தவும் அனுமதி கேட்டதாக கூறினார். 

டிடிவி தினகரன் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், கட்சியில் இல்லாத நபர் டிடிவி என்றும், அவரை கட்சியில் இருந்து முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளார் என்றும் கே.பி. முனுசாமி கூறினார்.