டிடிவி தினகரன் ஒன்றும் கோழை அல்ல எனவும், அவர் தலைமை கழகம் வருவதை முறைப்படி சொல்லி விட்டு தான் வருவார் எனவும் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

அதிமுக துணைப்பொதுச்செயலாளராக இருந்த டிடிவி தினகரன் தேர்தல் ஆணையம் முடக்கிய இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சிறைக்கு சென்றார்.

இதனால் எடப்பாடி பிரிந்த ஒபிஎஸ் அணியுடன் இணைய திட்டமிட்டார். ஆனால் அவர்கள் கட்டுப்பாடுகள் பலமாக வைக்கவே தினகரன் இசைந்து கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

ஆனால் டிடிவி ஜாமினில் வெளியே வரும் வரை அதிமுகவின் இரு கட்சிகளும் இணையவில்லை. இதனால் ஆத்திரமடைந்த டிடிவி 60 நாட்கள் பொறுப்பேன், கட்சி இணையவில்லை என்றால் மீண்டும் கட்சி பணியாற்றுவேன் என தெரிவித்தார்.

ஆனால் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை டிடிவிக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த டிடிவி தினகரன் ஆதரவாளர்களான எம்.எல்.ஏக்கள் கட்சிக்குள் அவ்வபோது குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதைதொடர்ந்து இன்று 60 நாட்கள் நிறைவுற்ற நிலையில் கட்சி பணியாற்றுவேன் என டிடிவி தெரிவித்தார்.

ஆனால் எடப்பாடி தரப்பு அவசர கூட்டம் போட்டு இணைப்பு குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், செய்தியாளரகளை சந்தித்த பெரம்பூர் எம்.எல்.ஏ வெற்றிவேல் டிடிவி தினகரன் ஒன்றும் கோழை அல்ல எனவும், அவர் தலைமை கழகம் வருவதை முறைப்படி சொல்லி விட்டு தான் வருவார் எனவும் தெரிவித்தார்.

தினகரனை ஒதுக்கி விட்டு கட்சி பணி ஆற்றலாம் என யாராவது கனவு கண்டால் ஏமார்ந்து போவார்கள் எனவும், அம்மாவின் ஆட்சி தொடரவேண்டும் என்ற நோக்கில் தான் தங்கள் அணியினர் எந்த தொந்தரவும் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.