டிடிவி தினகரனின் பெங்களூரு பயணத்தை முன்னிட்டு சிறை வளாகத்தில் ஆயிரத்திற்கும் அதிமான ஆதரவாளர்கள் திரண்டுள்ளதால் பரப்பன அக்ரஹாரா பரபரப்புடன் காணப்படுகிறது. 

இரட்டை இலைக்காக லஞ்சம் அளித்த புகாரின் கீழ் டிடிவி.தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி அதிகாரிகளுன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

உரிய ஆதாரங்கள் இருக்கும்பட்சத்தில் டிடிவி இன்றே கைது செய்யப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபுறம் அந்நிய செலாவணி வழக்கு மறுபுறம் லஞ்ச வழக்கு உள்ளிட்டவைகளால் தட்டுத்தடுமாறி உள்ள தினகரன் முடிவுகளை எடுக்க முடியாமல் திணறி வருகிறார்.

தன் பக்கம் உள்ள அமைச்சர்களையும், எம்.எல்.ஏ.க்களையும் தக்க வைக்க பல்வேறு யூகங்களை வகுத்து வரும் தினகரன் இது குறித்து சசிகலாவுடன் ஆலோசிக்க இன்று பெங்களூரு செல்கிறார். 

தினகரனின் பெங்களூரு பயணம் குறித்து தகவல் அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் அக்ரஹாரா சிறை வளாகத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் குவிந்துள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.