வரும் மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுகவுடன் எப்படியாவது கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என பாஜக முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.  ஆனால் அதிமுக இரண்டாக உடைந்து செயல்பட்டு வருவதால் தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பில்லை என கருதும் பாஜக அதிமுகவையும் அமமுகவையும் இணைக்க பெரும் முயற்சி செய்து வருகிறது.

இதற்கான பேச்சு வார்த்தை ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. முக்கியமாக தினகரனையும்  அவரது கட்சியினரையும்  அ.தி.மு.க-வுக்குக் கொண்டுவரும் வேலையைப் பாருங்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக அசைன்மெண்ட் கொடுத்துள்ளது. இணைப்புக்குப் பிறகு . தினகரனுக்கும் முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என உறுதியை அளிக்கவும் பாஜக வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து சில விஐபிக்கள் இது குறித்து தினகரனை சந்தித்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

திமுக – காங்கிரஸ் கூட்டணியை  எதிர்த்து வலுவாகக் களம் இறங்கவேண்டிய அதிமுக தற்போது தினகரன் பிரிவினால் பிரிந்துகிடக்கிறது. அதிமுவின் வாக்குவங்கியில் கணிசமான அளவு, இப்போது தினகரன் வசம் உள்ளது.

 

அதேபோல் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்குப் போட்டியாக வலுவான அமைப்பாகத் தினகரனின் அமமுக உள்ளது. இந்நிலையில் அதிமுகவோடு கூட்டணி அமைத்துத் தேர்தல் களத்தில் நின்றாலும் அக்கட்சியின்  வாக்குவங்கி பிரிந்துகிடப்பதால், திமுகவுக்கு அது சாதகமாகப் போய்விடும் நிலை உள்ளது.

இதனை நன்கு உணர்ந்துள்ள அதிமுக மற்றும் பாஜக எப்படியாவது தினகரைனை வழக்கு கொண்டவர முயற்சி செய்து வருகிறது.

அதே நேரத்தில் தினகரன் ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். ஒருவேளை, தினகரன் தரப்புடன் எந்தக் கட்சியும் கூட்டணி வைக்காதபட்சத்தில், அவர்  ஜெயலலிதாவைப் போல் தனித்தே தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தினகரனைத் தவிர, அவர் கட்சியில் உள்ளவர்கள் யார் வந்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயார் என எடப்பாடி தரப்பு அடம்பிடித்து வருகிறது. தினகரனோ நான் சொல்லும் கண்டிஷனுக்கு அதிமுக ஒத்துவந்தால் மட்டுமே இணைப்பு சாத்தியம் என்று கூறி வருகிறார். தற்போது  இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க பாஜக  மேலிடம்  முடிவு செய்துள்ளது.

இப்பிரக்கனையில் தினகரனை எப்படியும் வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே குக்கர் சின்ன விவகாரத்தில்  அவருக்கு ஆப்பு  வைக்கப்பட்டதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.