வரும் ஏப்ரல் மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக செய்து வருகின்றன. தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் இடையே கூட்டணி உருவாகியுள்ளது.

இந்த கூட்டணியில் யார்? யார் ? இடம் பெற்றுள்ளனர் என்பது இதுவரை சஸ்பென்ஸாகவே  உள்ளது. மதிமுக, இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் கூட்டணியில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாக இக்கட்சிகள் திமுகவுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது அந்தக் கூட்டணிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. திமுகவின் பொருளாளார் துரைமுருகன் காங்கிரஸ் கட்சி மட்டும் தான் தங்களுடன் கூட்டணி வைத்துள்ளது என்றும், இனி அடுத்து வரும் காலங்களில் திமுக கூட்டணிக்குள் யார் வேண்டுமானாலும் வரலாம், யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் என பேசி மற்ற கட்சிகளை கடுப்பாக்கினார்.

அதே நேரத்தில் விசிகவின் பரம எதிரியான பாமகவுடன்  கூட்டணி வைப்பது குறித்து திமுக தனியே பேசிக் கொண்டிருந்தது. இதனால் அதிருப்தி அடைந்த திருமா, பாமக இருக்கும் கூட்டணில் நான் இருக்க மாட்டேன் என அறிவித்தார். மேலும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்தார்.
திருமாவை கழட்டி விடுவதற்காகவே பாமகவுடன் திமுக கூட்டணி குறித்து பேசினார்களா என்ற தகவலும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொது செயலாளர் வன்னி அரசு தனது ஃபேஸ் புக் பக்கத்திலும், டிவிட்டரிலும் அவசர, அவசரமாக சில கருத்துககளை பதிவிட்டுள்ளார். அதில் மற்றவர்களை மதிக்காமலும் தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத்தானே பெரிதாக விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத்தொலைவார்கள் என குறிப்பிட்டுள்ளார். வன்னி அரசின் இந்தக்  கருத்து, திமுகவுடன் கூட்டணி அமைப்பதை விடுதலைச் சிறுத்தைகள் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.

இந்த குழப்பங்கள் நடந்து வரும் நிலையில் திருமாவளவன் தரப்பை டி.டி.வி.தினகரன் தரப்பினர் சந்தித்து கூட்டணி குறித்து பேசியுள்ளனர். இந்த கூட்டணிதான் தங்கள் கட்சிக்கு சரிவரும் என்று திருமாவளவன் நினைப்பதாக கூறப்படுகிறது. ஏற்னவே பலமுறை தினகரன்- திருமா சந்திப்பு நிகழ்ந்துள்ளதால் இது சாத்தியம் என்கின்றனர் அரசியல் விமர்கசர்கள்.

தினகரன் – திருமா  தரப்பு சந்திப்புக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்தான் ஏற்பாடு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.