அரவக்குறிச்சி இடைத்தேர்தல் அமமுக வேட்பாளருக்கு பக்கபலமாகவும் ஆதரவாகவும் இல்லாமல் மாவட்ட செயலாளர் தனித்து செயல்படுவதாக டி.டி.வி.தினகரன் டீமில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அமமுக கரூர் மாவட்ட செயலாளரான தங்கவேல் நடந்து முடிந்த எம்.பி., தேர்தலில் போட்டியிட்டார். இவர் எம்பி தேர்தலில் போட்டியிட்ட போது செயல்பட்டது போல தற்போது அரவக்குறிச்சியில் நடைபெறும் கிடைத்தேர்தலில் சாகுல் அமீதுவுக்கு ஆதரவாக செயல்படவில்லை என கட்சி நிர்வாகிகள் குறைகூறி வருகின்றனர். இது குறித்து அமமுக வட்டாரத்தில்  விசாரித்தபோது, ’’ மாவட்ட செயலாளரான தங்கவேல் எதிலும் பிடிப்பு இல்லாதது போன்று நடந்து கொள்கிறார். இதில் சீனியர் தலைவர்களை மாவட்ட செயலாளர் மதிக்காமல் செயல்பட்டு வருகிறார். 

மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற தங்கவேல், எம்பி தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுடன் அரவக்குறிச்சி உள்பட 4 தொகுதிக்கான இடைத்தேர்தலுடன் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும், அதில் அரவக்குறிச்சியில் போட்டியிடலாம் என கனவு கண்டு கொண்டிருந்தார். ஆனால், எம்பி தேர்தலுடன் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால் அவரது கனவு தவிடு பொடியானதால் எம்பி தேர்தலில் நின்று செலவு செய்தார். இதில் திடீரென அரவக்குறிச்சி உள்பட 4 தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அதற்கான பிரசாரம் நாளையுடன் முடிகிறது. இதனால் தனக்கு கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்ற ஆத்திரத்தில் வேட்பாளருக்கு வெற்றிக்கான வேலைகளை செய்யாமல் தடுத்து வருகிறார்’ என கட்சியினர் குமுறுகின்றனர். 

அமமுகவில் இருந்த செந்தில்பாலாஜி திமுகவுக்கு தாவிய பிறகு கரூர் அமமுக நிர்வாகிகள் பலரையும் அழைத்துச் சென்று விட்டார். மீதமிருந்தவர்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுகவுக்கு இழுத்துச் சென்று விட்டார். இதனால் அமமுக பலமிழந்து போனது. ஆனால், டி.டி.வி.தினகரன் தனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டு கட்சி மாறிய செந்தில் பாலாஜியை தோற்கடித்தே ஆக வேண்டும் என்கிற சபதத்தை எடுத்திருந்தார். ஆனாலும் தனது கட்சி மாவட்ட செயலாளரே அரவக்குறிச்சியில் மேம்போக்காக நடந்து கொள்வதால் மெரும் அப்செட் ஆகியுள்ளார் டி.டி.வி.தினகரன். செந்தில் பாலாஜியும் அரவக்குறிச்சியில் வெயிட்டாக ஆட்டம் காட்டி வருவதால் அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தனது சபதத்தை நிறைவேற்ற முடியாமல் போய்விடுமோ என்கிற தவிப்பில் இருக்கிறார் டிடி.வி.தினகரன். 

மாவட்டச் செயலாளர் தங்கவேல் மீது நடவடிக்கை எடுத்தால் அவர் கட்சி மாறி விடுவாரோ என்கிற தவிப்பு டி.டி.வி.தினகரனிடம் இருப்பதால் எந்த முடிவையும் எடுக்க முடியாத இக்கட்டான நிலையில் இருக்கிறார்.