துக்ளக் ஆசிரியராக இருப்பவர் கையூட்டுப் பெற்றுக்கொண்டு பேசியதாக ஜெயக்குமார்  போன்றவர்களெல்லாம் விமர்சிக்கும் அளவுக்கு குருமூர்த்தியின் தரம் தாழ்ந்து போனது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

“உங்கள் வீட்டில் தீப்பற்றி எரியும்போது, கங்கை நீரால் தான் தீயை அணைப்பேன் என்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கழிவுநீர் கிடைத்தால் அதன் மூலமும் தீயை அணைக்க முயற்சிப்போம்” என்று அருண் ஷோரி கூறியதை, எதிர் வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலின் சூழ்நிலையுடன் ஒப்பிட்டுப் பேசினார்.   ஜனவரி 27 ஆம் தேதி பெங்களூரு  பரப்பனா அக்ரஹாரா சிறையில் இருந்து சசிகலா விடுவிக்கப்படுவார் என்ற ஊகங்களுக்கு மத்தியில் இந்த குருமூர்த்தியின் இந்த கருத்து வெளிவந்துள்ளது அரசியல் நோக்கர்களால் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

 

இதுகுறித்து டி.டி.வி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, பவித்திரர்களாக பாவித்துக்கொண்டு பதற்றத்தில் பிதற்றுவதற்கெல்லாம் பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பலரும் நமது கருத்தைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் எனது கருத்தை இங்கே பதிவிடுகிறேன்.

கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாஃபியா யார்? என்பதையெல்லாம்  முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாட்டு மக்கள்தானே தவிர, கங்கை புத்திரன் பீஷ்மராகவே தன்னை பாவித்துக்கொள்ளும் குருமூர்த்தி போன்ற மனநிலை கொண்டவர்கள் அல்ல. துக்ளக் விழாவில், அதன் ஆசிரியராக இருப்பவர் கையூட்டுப் பெற்றுக்கொண்டு பேசியதாக ஜெயக்குமார்  போன்றவர்களெல்லாம் விமர்சிக்கும் அளவுக்கு குருமூர்த்தியின் தரம் தாழ்ந்து போனது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது’’ என கொந்தளித்துள்ளார்.