இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடும் அரவக்குறிச்சி தொகுதி, அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

அணி மாறியதால் எடப்பாடி பழனிசாமியும், பாதியில் அத்துவிட்டு ஓடியதால் டி.டி.வி.தினகரனும் செந்தில் பாலாஜி மீது கூட்டுக் கடுப்பில் இருக்கிறார்கள். இதனால் இரண்டு தரப்புமே செந்தில் பாலாஜிக்கு எதிராக முஷ்டி தூக்கி நிற்கின்றன. அதிலும் குறிப்பாக, டி.டி.வி.தினகரன் தனது கட்சியினருக்கு கண்டிப்பான உத்தரவே போட்டு இருந்தார்.

இதனால், செந்தில் பாலாஜிக்கு செல்வாக்கான பகுதிகளில் கிடாய் விருந்தெல்லாம் வைத்துக் கலக்கிய அமமுகவினர், “நீங்க பரிசுப் பெட்டிக்கு ஓட்டு போடாட்டியும் பரவாயில்ல. தயவு செஞ்சு சூரியனுக்குப் போட்டுறாதீங்க”என்று காலில் விழாத குறையாகக் கெஞ்சி இருக்கிறார்கள்.

இதையெல்லாம் பார்த்துவிட்டு, ”செந்தில் பாலாஜிக்கு எதிரா இவங்க தீயா வேலை செய்யுறத பார்த்தா நம்ம படுத்துக்கிட்டே ஜெயிக்கலாம் போலிருக்கே” என்று ஏகத்துக்கும் குஷியாகிக் கிடக்கிறார்கள் அதிமுகவினர்.