அமமுக பொதுச்செயலாளாராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு.!பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம் என்ன.?
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் திமுக அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அமமுக பொதுக்குழு கூட்டம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் அக்கட்சியின் துணைத் தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. பொதுக்குழுவில், பொதுச் செயலாளர், தலைவர், துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டார். தலைவராக சி.கோபாலன், துணை தலைவராக அன்பழகன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதியதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று முதல் 4 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்கள்
. பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட டிடிவி தினகரனுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.இதனை பெற்றுக்கொண்ட டிடிவி தினகரன் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. அதில், அமமுகவை தமிழக மக்களுக்கான இயக்கமாக நடத்தும் டிடிவிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
திமுக அரசுக்கு கண்டனம்
ஐக்கிய அமீரக மற்றும் குவைத்தில் அமமுக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அதை பொதுக் குழு அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை, திருப்பூர், விழுப்புரம், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டதை பொதுக்குழு அங்கீகரித்தது. அம்மா தொழிற்சங்க பேரவை முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனோடு பல துணை சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
அமமுகவின் ஆறாவது ஆண்டு விழாவை ஆண்டு முழுவதும் நடத்துவது என்றும் குக்கர் சின்னத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பது என முடிவு எடுக்கப்பட்டது. மேலும் காவிரி பிரச்சனை தமிழகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் புதிய அணை கட்டும் திட்டத்துக்கு கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேலும் கர்நாடக மாநிலத்துக்கு சென்றும் காவிரி பிரச்சனை குறித்து முதலமைச்சர் பேசாமல் வந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படியுங்கள்